‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்பட விமர்சனம்
Casting : Madumkesh, JiyaShankar, Arjun Ashokan, MS Bhaskar
Directed By : Vijay
Music By : Harris Jayaraj
Produced By : D Studios & Maali and Manvi Movie Makers
நாயகி ஜியா சங்கரை தூரத்தில் இருந்து பார்ப்பதையே தன் வாழ்வின் பாக்கியம் என்ற மனநிலையில் இருக்கும் நாயகன் மதும்கேஷ், அவரை ஒருதலையாக காதலிக்கிறார். ஜியா சங்கர், அவரது நண்பர் அர்ஜுன் அசோகனை காதலிக்கிறார். இதற்கிடையே ஜியா சங்கர் மரதியால் பாதிக்கப்படுகிறார். தூங்கி எழுந்தால் முந்தைய நாளில் நடந்த அனைத்தையும் மறந்து விடும் நிலைக்கு சென்று விடுகிறார். இதனால் தான் யார் ? என்று தெரியாமல் ஒவ்வொரு நாளும் தவிக்கும் அவரிடம், காதலனாக அறிமுகமாகி பயணிக்க தொடங்குகிறார் மதும்கேஷ். அவரது இந்த பொய், ஜியா சங்கரின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது, என்பதை முக்கோண காதல் கதையாக சொல்வதே ‘காதல் ரீசெட் ரிப்பீட்’.
மனதில் காதல் இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் ஏக்கத்தோடு பயணிக்கும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் நாயகன் மதும்கேஷ். இறுக்கமான முகம், நடவடிக்கைகளில் பொறுமை என்று தனியாக தெரியும் குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரத்தை மிக கச்சிதமாக கையாண்டு கவனம் ஈர்க்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ஜியா சங்கர், அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் பார்வையாளர்களை கவர்ந்து விடுகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள காதல் கதை என்பதால் அவருக்கு நடிக்க அதிகமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அனைத்து வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி பார்வையாளர்கள் மனதில் எளிதில் இடம் பிடித்து விடுகிறார்.
முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் அசோகன், தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். சிறிய வேடம் என்றாலும் விஜி சந்திரசேகர், ஜெயப்பிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு மற்றும் திரை இருப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
படம் முழுவதும் வெளிநாட்டில் நடப்பதால், அழகான இடங்களை தேடிப்பிடித்து காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். எங்கு கேமரா வைத்தாலும், பசுமையும், பழமையும் நிறைந்த இடங்களாக இருப்பதால் ஒளிப்பதிவாளர் அரவிந்த்கிருஷ்ணா, அத்தனை அழகையும் சிந்தாமல் சிதறாமல் தன் கேமராவில் பதிவு செய்து கண்களுக்கு காட்சி விருந்து படைத்திருக்கிறார்.
ஹரிஷ் ஜெயராஜ் இசையில் பாடல்கள், பின்னணி இசை மற்றும் முக்கியமான பீஜியம்கள் ஏற்கனவே அவரது இசையமைப்பில் வெளியான படங்களின் சாயலோடு பயணித்தாலும், காதல் கதைக்கு உயிரூட்டியிருக்கிறது.
படம் முழுவதும் நிரம்பியிருக்கும் காதல் உணர்வுகளையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் பார்வையாளர்கள் மனதில் இறக்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆண்டனி.
முக்கோண காதல் கதையை புதிய வடிவில் கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் விஜய், எளிமையான காட்சிகளை திரைக்கதையின் முக்கியத்துவ காட்சிகளாக வைத்துக் கொண்டு படத்தை நகர்த்தியிருக்கிறார்.
அழகான காதல் கதை, அதை சுமந்து செல்லும் கதாபாத்திர தேர்வும் சரியாக அமைந்திருந்திருப்பதோடு, ஸ்காட்லாந்து என்ற அழகு நிறைந்த கதைக்களத்தில் அவற்றை சொல்லும் போது, திரையில் தெரியும் பிரமாண்டம் திரைக்கதையில் இல்லாதது படத்திற்கு பெரும் பலவீனம். இருந்தாலும், கதாநாயகியின் நடிப்பு, காதலை அவர் உணர்ந்த பிறகு ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை படத்தை ஓரளவு ரசிக்க வைக்கிறது.
மொத்தத்தில், ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ ஒரு முறை பார்க்கலாம்.
ரேட்டிங் 3/5

