Jan 21, 2026 06:26 PM

’ஹாட் ஸ்பாட் 2’ திரைப்பட விமர்சனம்

51905bf6536783fc9cc67a3524799f09.jpg

Casting : Priya Bhavani Shankar, MS Baskar, Thambi Ramaiah, Brigida, Bhavani Sri, Aditya Baskar, Rakshan, Ashwin, Sanjana Tiwari, KJ Balamanimarbhan, Vignesh Karthik

Directed By : Vignesh Karthick

Music By : Sathish Raghunathan

Produced By : KJB Talkies - KJ Balamanimarbhan, Aneel K Reddy

 

தயாரிப்பாளரிடம் கதை சொல்லும் அறிமுக இயக்குநரின் நான்கு வெவ்வேறு கதைகள் மூலம் பார்வையாளர்களின் ஆதரவை பெற்ற ‘ஹாட் ஸ்பாட்’ படத்தின் தொடர்ச்சி தான் ‘ஹாட் ஸ்பாட் 2’. முதல் பாகத்தைப் போலவே இதிலும், அதே தயாரிப்பாளரிடம் அறிமுக இயக்குநர் கதை சொல்ல வருகிறார். அவரது நோக்கமும் முதல் பாகத்தின் இயக்குநருடையது தான் என்றாலும், அவர் பேச இருக்கும் விசயம் தனிப்பட்ட ஒருவருக்கானது அல்ல, ஒரு சமூகத்திற்கானது. அது என்ன ? , அதன் மூலம் மக்களுக்கு இயக்குநர் எதை புரிய வைக்க முயற்சிக்கிறார் ? என்பது தான் ‘ஹாட் ஸ்பாட் 2’.

 

திரை நட்சத்திரங்களின் வெறித்தனமான ரசிகர்கள், பெண்ணியம் மற்றும் ஆடை சுதந்திரம் என்ற பெயரில் பெரியவர்கள் மனதை புரிந்துக் கொள்ளாத இளசுகள், காதலின் தற்போதைய நிலையை எண்ணி கவலை கொள்ளும் ஆண்கள், ஆகிய மூன்று தரப்பினரையும் அலசும் வெவ்வேறு கதைகளில், இரு தரப்பிலும் இருக்கும் நியாயத்தை பேசியிருக்கும் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், இந்த மூன்று கதைகளை விவரிக்கும் அறிமுக இயக்குநரின் சொந்த கதை மூலம் உலகளவில் பேசுபொருளாக உள்ள ஒரு விசயத்தை பற்றி அழுத்தமாக அல்லாமல் மேலோட்டமாக பேசியிருக்கிறார்.

 

ஒரு கதைக்கருவுக்கு திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்து பார்வையாளர்களை திருப்திப்படுத்த போராடுவதை விட, சமூகப் பிரச்சனைகளை பேசும் குட்டி குட்டி கதைகளை ஒன்று சேர்த்து சொல்லி வெற்றி பெற்ற இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், அதையே தனது பாணியாக தொடர்ந்திருப்பது முதல் பாகத்தைப் போலவே கைகொடுத்தாலும், சில இடங்களில் சறுக்கல்களையும் சந்தித்திருக்கிறது. அதே சமயம், முதல் பாகத்தைப் போல் பெரும் சர்ச்சையாக அல்லாமல், ஒரு எல்லைக்குள் வலம் வந்திருக்கும் விக்னேஷ் கார்த்திக், பேசும் ஒவ்வொரு பிரச்சனையிலும், இரு தரப்பிலும் இருக்கும் நியாயத்தை பேசி, நடுநிலையாக நின்றிருக்கிறார். 

 

கதைகளின் மாந்தர்களாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், அஷ்வின், ஆதித்யா பாஸ்கர், ரக்‌ஷன், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், தயாரிப்பாளர் கே.ஜெ.பாலமணிமர்பன், பவானி ஸ்ரீ, பிரிகிடா, சஞ்சனா திவாரி ஆகியோர் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

 

கதைகளை சொல்லும் கதாபாத்திரமாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பில்டப் கொஞ்சம் ஓவர் தான்.

 

தற்போதைய காதலின் நிலையையும், பெண்களின் மனங்களையும் நினைத்து கவலை கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஷ்வின் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. அவரது நண்பராக நடித்திருக்கும் அமரனின் டைமிங் வசனங்கள் சிரிக்க வைக்கிறது. 

 

அழுத்தமான கதாபாத்திரத்தில் இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லும் கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் கவனம் ஈர்ப்பது போல், தனது அதிரடியான செயல் மூலம் 2கே கிட்ஸுகளுக்கு அதிரடியான அறிவுரை வழங்கி தம்பி ராமையா அதிர்ச்சியளித்திருக்கிறார்.

 

நான்கு கதைகள் மற்றும் அவற்றுக்கான களங்களுக்கு ஏற்ப ஒளிப்பதிவில் வித்தியாசத்தை காட்டி கவனம் ஈர்த்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் ஜெகதீஷ் ரவி மற்றும் ஜோசப் பால்.

 

சதிஷ் ரகுநாதன் இசையில் ஹாட் ஸ்பாட்டின் முதல் பாகத்திற்கான பீஜியம் மற்றும் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது.

 

யு.முத்தயனின் படத்தொகுப்பும் சி.சண்முகத்தின் கலை இயக்கமும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் விக்னேஷ் கார்த்திக், சூடான விசயங்களை சுவைபட சொல்வதோடு, அதில் இருக்கும் இரு தரப்பினர் பக்கம் இருக்கும் நியாயத்தை சமமாக பேசி, அனைத்து தரப்பினரையும் சிந்திக்க வைக்க முயற்சித்திருக்கிறார். 

 

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் சிந்தனை சமூக பிரச்சனைகளை விவாதிப்பது மட்டும் இன்றி, அதில் இருக்கும் சந்தேகங்கள் குறித்து பார்வையாளர்களிடம் பல கேள்விகளை முன் வைத்து, சூடான விவாதங்களும், கேள்விகளும் தொடரும், என்ற ரீதியில் படத்தை முடித்திருப்பது பாராட்டுக்குறியதாக இருந்தாலும், ஒரே பாணியில், ஒரு நிலையான தீர்வு சொல்லாமல் தொடர்வது  பார்வையாளர்களை சற்று சோர்வடைய வைக்கிறது.

 

மொத்தத்தில் ‘ஹாட் ஸ்பாட் 2’ ஆச்சரியம் தரவில்லை.

 

ரேட்டிங் 3/5