Jul 21, 2019 04:21 AM

ஹீரோவாகும் இயக்குநர் தங்கர் பச்சானின் மகன்!

ஹீரோவாகும் இயக்குநர் தங்கர் பச்சானின் மகன்!

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான தங்கர் பச்சான், தனது மகனை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை இயக்குகிறார்.

 

பல்வேறு மொழிகளில் 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தங்கர் பச்சான், ‘அழகி’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். தொடர்ந்து ‘சொல்ல மறந்த கதை’, ‘பள்ளிக்கூடம்’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’, ‘களவாடிய பொழுதுகள்’ போன்ற படங்களை இயக்கினார்.

 

2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு படம் இயக்காமல் இருந்த தங்கர் பச்சான், தற்போது தனது மகன் விஜித் பச்சானை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை இயக்குகிறார். சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்க விழாவில், முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி கலந்துக் கொண்டு காமிராவை இயக்கி படப்பிடிப்பு துவக்கி வைத்தார்.

 

கிராமத்து பின்னணியில் அழுத்தமான படைப்புக்களை உருவாக்கிய தங்கர் பச்சான் இம்முறை சென்னை நகரத்தை மையமாக கொண்ட, முற்றிலும் மாறுபட்ட முழு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நகைச்சுவைப் படத்தை இயக்குகிறார்.

 

Thangar Bachan Movie Pooja

 

தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் நாயகனாக அறிமுகமாகும் இத்திரைப்படத்தில் முனீஸ்காந்த் நாயகனுக்கு இணையான முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர்களுடன் மிலனா நாகராஜ், அஸ்வினி என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். டான்ஸ்மாஸ்டர் தினேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, மன்சூர் அலிகான், ஸ்டன்ட் சில்வா, மற்றும் யோகிராம் ஆகியோர் வில்லன்களாக நடிக்கும் இப்படத்திற்கு தரண்குமார் இசையமைக்கிறார். பிரபு தயாளன், சிவபாஸ்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்ய, சக்தி செல்வராஜ் கலையை நிர்மாணிக்கிறார். ஸ்டண்ட் சில்வா ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார்.

 

பி.எஸ்.என் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னையில் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது.