’பேட் கேர்ள்’ பட விழாவில் அறிவிப்பு மூலம் அதிர்ச்சியளித்த இயக்குநர் வெற்றிமாறன்

கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் சார்பாக வெற்றிமாறன் தயாரிப்பில், வர்ஷா இயக்கத்தில், அனுராக் காஷ்யப் வழங்கும் படம் ’பேட் கேர்ள்’. அஞ்சலி, சரண்யா, ஹ்ரிது ஹரூன், டீஜே அருணாசலம் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், படக்குழுவினருடன் இயக்குநர் மிஷ்கின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படம் பற்றிய பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இயக்குநர் வர்ஷா பேசுகையில், ”ஏழு மாதத்திற்கு முன்பு டிரைலர் வெளியீட்டு விழாவில் முதன் முதலாக மேடை ஏறினேன். அன்று முதல் இன்று வரை பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது. இந்த படம் பல நாடுகளில் பட திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. 13 நாடுகளில் 13 பட திருவிழாக்களில் பங்கேற்று வந்திருக்கிறேன். பேட் கேர்ள் பட குழுவினர் அனைவருக்கும் நன்றி முக்கியமாக இந்த வாய்ப்பு கொடுத்த வெற்றிமாறன் சாருக்கு மிக்க நன்றி.
வெளிநாடுகளில் திரையிடப்பட்டபோது அனைவரும் அங்கு கொண்டாடினார்கள். அதே நேரத்தில் இங்கு குப்பை படம் என்று கூறினார்கள். பல நாடுகளில் எழுந்து நின்று கைதட்டி மரியாதை கொடுத்தார்கள். பல நாடுகளில் சுற்றி இன்று இப்படம் பிறந்த வீட்டிற்கு வந்திருக்கிறது.
இப்படம் பிடிக்கவில்லை என்றால், அனைவருக்கும் அவரவருடைய வாழ்க்கையை வாழ்வதற்கும் முடிவெடுப்பதற்கும் உரிமை இருக்கிறது என்று ஏற்றுக்கொள்ளுங்கள். பல படங்களில் பெண்களை பாலியல் பொருளாக தான் காண்பிக்கிறார்கள். அதுவரை பிரச்சனை இல்லை ஆனால் பெண்கள் தங்களுக்கு என்று ஆசை விருப்பம் என்று கூறும் போது தான் பிரச்சனையாக மாறுகிறது.
பாலியல் உறவு ரீதியாக பேசக்கூடாது என்பதை விட எப்படி பேச வேண்டும் என்பது இருக்கிறது. இப்படி வெளிப்படையாக பேசினால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்று யோசிக்காதீர்கள். உரையாடல் தான் மிகவும் உதவியாக இருக்கும்.
பெண்கள் கலாச்சாரத்தை சீரழிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். பெண்களா கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும்? கலாச்சாரம் தானே பெண்களை பாதுகாக்க வேண்டும். சம்பந்தமே இல்லாமல் நானும் அஞ்சலியும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சென்றோம். எங்கள் படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். ராட்டடோம்-ல் ராம் சாருடைய படத்தை திரையிடும்போது எங்களை அழைத்து பேசிக் கொண்டிருப்பார். எங்களுக்கு மிகுந்த ஆதரவு கொடுத்தார்.
வெற்றிமாறன் சாரிடம் பணியாற்றும் போது மிகவும் கடினமாக இருக்கும். இந்த கேமராவை ஏன் இங்கே வைத்தீர்கள்? இதுபோன்று ஏதாவது கேட்டுக் கொண்டே இருப்பார். நாங்கள் அவ்வப்போது நம்பிக்கை இழந்து விடுவோம். ஆனால், அனுராக் சார் தான் இழந்த நம்பிக்கையை மீட்டுத் தருவார். வெற்றிமாறன் சாரிடம் கதை எழுதக் கற்றுக் கொண்டேன். தனுஷ் சாரிடம் எப்படி முடிப்பது என்பதை கற்றுக்கொண்டேன். இப்படத்தில் சரண்யாவின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படும்.” என்றார்.
இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “கலைப் படைப்புகள் அனைத்தும் சமூகத்தில் இருந்து தான் உருவாகிறது. ஆனால், இந்த சமூகம் கலைப் படைப்புகளை பார்த்து சமூகத்தை கெடுக்கிறது என்கிறார்கள். மோசமான படைப்பு சமூகத்தை கெடுக்கிறது நல்ல படைப்பு சமூகத்தை சிந்திக்க வைக்கிறது. ஒரு சினிமா உடைய அதிகபட்ச பாதிப்பு ஒரு சில வினாடிகளிலேயே ஒரு மனிதன் வாழ்க்கையைப் பற்றி சிந்திப்பதை நிறுத்துகிறது. மனிதன் ஓடிக்கொண்டே இருக்கும் போது இரண்டரை மணி நேரம் படம் பார்ப்பதற்காக திரையரங்கில் உட்காரும்போது, நம்முடைய சித்தாந்தங்கள் கருத்தியல்கள், நமக்கு பிடித்தவைகள், சிறு வயது முதல் அப்பா, அம்மா, மதம், ஜாதி போன்றவை நமக்கு கற்றுக் கொடுத்ததை கலை படைப்புகள் எதிர்க்கும் போது, மறுக்கும் போது நமக்கு பெரிய கோபம் வருகிறது. இந்த கோபம் நியாயம் ஆனது தான். ஆனால் இந்த கலை படைப்பை எடுக்கின்ற மனிதன் எப்படிப்பட்ட படைப்பை எடுத்திருக்கிறான் என்பதை பாருங்கள்.
இந்த நூறு வருட தமிழ் சினிமாவை உற்றுப் பார்த்தீர்களானால், சலித்து பார்த்தீர்களானால் எத்தனை படைப்புகள் தோன்றும்? எவ்வளவு கோடிகள் ஒழுக்கம் இல்லாத படங்களுக்கு கொட்டி இருக்கிறோம். எத்தனை மோசமான படங்களை பார்த்து கைதட்டி இருக்கிறோம்? விசில் அடித்து இருக்கிறோம்? இப்போது கொஞ்சம் தர்மத்தோடு பார்க்க வேண்டும். ஒரு படத்தை விமர்சனம் செய்வதற்கு அனைவருக்கும் சுதந்திரம் உண்டு எவ்வளவு விமர்சனங்கள் வருகிறது அந்த அளவிற்கு சுதந்திரம் இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், அந்த விமர்சனங்கள் கூர்மையாக இருக்கலாம், கிள்ளலாம், ஒரு சிறிய பின் வைத்து குத்தலாம், அதனால் ஒரு சொல் ஒரு துளி ரத்தம் கூட சிந்தலாம். ஆனால், கழுத்தை துண்டிக்கக் கூடாது. அதுவும் ஒரு கலைஞனுடைய கழுத்தை துண்டிக்கக் கூடாது.
இந்த படத்தைப் பற்றி நிறைய விமர்சனங்கள், சென்சாரில் பெரிய போராட்டம். அடுத்து இப்படத்தைப் பார்த்தால் தெரியும். நிறைய காட்சிகள் துண்டிக்கப்பட வேண்டியவை. அதற்கு சென்சருக்கு உரிமை இருக்கிறது. சென்சாரில் உள்ள மக்களுக்கும் உரிமை இருக்கிறது. அப்படியும் கலை படைப்பு தப்பித்து விட்டது நான் வர்ஷா இயக்கிய படத்தை மற்றும் கூறவில்லை, எல்லா தோற்கிற படங்களையும் கூறுகிறேன்.
என் அலுவலகத்திற்கு வந்து ஒருவன் உதவி இயக்குநராக வருகிறேன் என்று சொன்னால் எனக்கு அவன் மீது மரியாதை வந்துவிடும். 2000, 3000 வேலைகள் இருக்கும் போது சமுதாயத்திற்கு கலைப்படைப்பின் மூலம் ஒரு விஷயத்தை சொல்ல வருகிறானே! அவன் எவ்வளவு பெரிய கலைஞன். அவனுக்கு சொல்லத் தெரிகிறதோ?! இல்லையோ?! 30 வருடங்களாக இந்த தெருவிலும் இங்கு இருக்கும் தேநீர் கடைகளிலும் வீணான உதவி இயக்குநர்களை எனக்கு தெரியும். என்னை விட வெற்றிமாறனை விட அறிவாளியான, அன்பான, மேன்மையான எத்தனையோ உதவி இயக்குநர்களை இந்த ரோடு சாகடித்து இருக்கிறது என்று எனக்கு தெரியும்.
சில வருடங்களுக்கு முன்பு வெற்றி இந்த பெண்ணை என்னிடம் அழைத்து வந்தான். சினிமா என்பது ஆண்களால் மிகவும் அழுத்தப்பட்ட ஒரு துறை. அந்த துறைக்கு ஒரு பெண் வருகிறாள் என்பது முள்ளோடு வருகிறாள் என்று தான் பொருள். அவள் என்னிடம் வந்த போது நான் அவளுக்கு மூன்று புத்தகம் கொடுத்தேன்.
இந்த படம் 50% பிடிக்கும் 50 சதவீதம் பிடிக்காது. ஒரு திரைப்படம் என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும். ஒரு திரைப்படம் 100% நன்றாக இருக்கிறது என்று சொன்னால் அப்படத்தில் உண்மை இல்லை என்று அர்த்தம். ஒரு திரைப்படம் 100% நன்றாக இல்லை என்று சொன்னால் அந்த கலை படைப்பு சரியில்லை என்று அர்த்தம். 50% சரியாக இருக்கிறது 50 சதவீதம் சரியாக இல்லை என்றால் தான் அது நல்ல திரைப்படம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஒரு சிலர் 50 விழுக்காடு நன்றாக இருந்த படத்தை 25 விழுக்காடு மனதில் வைத்துக் கொண்டு 75 விழுக்காடு சரியில்லை என்று கூட சொல்லலாம். ஆனால், ஒரு நியாயம் வேண்டும்.
நேற்று இரவு ஆறு பேர் இந்த படத்தை பார்த்தோம். வெற்றி என்னை மாதிரி அல்ல, சரியான நேரத்திற்கு தூங்கி விடுவான். அவன் தூங்கி விட்டான் படத்தை பார்த்து முடித்ததும் அவனிடம் பேச முடியவில்லை அதன் பிறகு அவனை எழுப்பி பேசினேன். அப்போது என்னுடைய உதவி இயக்குநர்கள் நான்கு பேர் நீண்ட விவாதம் செய்தார்கள். ஒரு அணி நன்றாக இருக்கிறது என்றும் இன்னொரு அணி நன்றாக இல்லை என்றும் விவாதம் போய்க்கொண்டிருந்தது. ஒரு இயக்குநராக நான் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஐந்தாவதாக ஒரு இயக்குநர் அமைதியாக இருந்தார் அவர் ஒரு பெண். உடனே நான் இருங்கடா ஆண்கள் மட்டுமே படத்தை பேசிக் கொண்டிருக்கிறோம் ஒரு பெண் பேசட்டும் என்றேன்.
ஒரு பெண்ணுடைய வாழ்க்கையைப் பற்றி, பெண்ணுடைய அந்தரங்கங்களைப் பற்றி, பெண்ணுடைய ஆசை பற்றி எடுத்திருக்கிறாள். ஆகையால், ஆண்களுக்கு புரியாது அந்தப் பெண்ணிடம் கேட்கலாம் என்றேன். உடனே அந்த பெண் சொன்னாள் எனக்கு பிடித்திருக்கிறது சார் என்று. இந்த படத்திற்கு பேட் கேர்ள் என்று வர்ஷா ஏன் பெயர் வைத்தாள் குட் கேர்ள் என்று ஏன் வைக்கவில்லை என்பதை உற்றுப் பார்க்க வேண்டும். இந்த சமூகத்தை துடைப்பத்தால் கூட்டாதீர்கள் என்று சொல்லவில்லை. துடைப்பத்தால் அடிக்காதீர்கள் என்று சொல்ல வந்திருக்கிறாள்.
எனக்கு வெற்றிமாறனுக்கும் ஒரு படத்திற்கு பெயர் வைப்பதற்கு ஆறு மாதங்கள் ஆகின்றது. இந்த பெண் பேட் கேர்ள் என்று பெயர் வைத்துள்ளார். உங்களுக்கு எல்லாம் 30 நாள் ஓடி விடுகின்றது. ஆனால், எங்களுக்கு அதுபோல எத்தனை நாட்கள் ஓடுகிறது என்று தெரியுமா? எத்தனை நாட்கள் நாங்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கின்றோம்? எத்தனை நாட்கள் பூஜை அறைக்குள் வரக்கூடாது என்று சொல்கிறார்கள், எத்தனை நாட்கள் நாங்கள் வேகமாக நடக்கக் கூடாது என்று சொல்கிறார்கள், இது போல் பல கேள்விகளை கேட்டிருக்கிறாள். இந்தக் கேள்வி ஒரு பெரிய கலை படைப்பிலிருந்து ஒரு தர்மத்திலிருந்து எழுந்த கேள்வி அல்ல, ஒரு எளிமையான கேள்வி.
நான் சின்ன பையனாக இருக்கும்போது ரொம்ப கஷ்டப்பட்டு சரோஜாதேவியின் செக்ஸ் புத்தகம் மூன்று வாங்கிக் கொண்டு வந்தேன். என்னுடைய அம்மா எப்போது வெளியே போவார்கள் என்று காத்துக் கொண்டிருப்பேன். மார்க்கெட்டிற்கு சென்று வரும் நேரத்திற்குள் அதை படித்து விட வேண்டும் என்று திறப்பேன். ஆனால் பயத்தில் படங்களை மட்டும் பார்த்துவிட்டு ஒளித்து வைத்து விடுவேன். ஒரு நாள் எங்க என் அம்மா நான் மார்க்கெட் போயிட்டு ஒருவரை பார்த்துவிட்டு வருவேன் இரண்டு மணி நேரம் ஆகும் என்று கூறினார். அப்பொழுது மூன்று புத்தகத்தையும் படிக்க ஆரம்பித்தேன் 17 வயது பையனுடைய ஆசை 17 வயது பையனுடைய காமம் 17 வயதுடைய பையனின் வாழ்க்கையை புரிந்து கொள்ளுதல் 17 வயதுடைய பையனின் கீழ்மையும் சொல்லலாம். படித்துக் கொண்டே இருக்கும் போது யாரோ கதவை தட்டினார்கள் நான் யார் என்று கேட்டேன், எங்க அம்மா. ஏனென்றால் அவர் பர்ஸிலிருந்து காசு எடுத்து செல்ல மறந்து விட்டார். உடனே எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை எங்கள் வீடு பெரிய வீடு அல்ல வறுமையில் இருக்கும் வீடு, ஒரே ஒரு அறை தான் இருக்கும். மேஜையின் மீது டைனோரா டிவி இருந்தது அதற்கு பின்பு ஒரு சிறிய சந்து இருந்தது அதற்குள் அந்த புத்தகங்களை போட்டுவிட்டு கதவை திறந்தேன். உடம்பெல்லாம் வேர்த்து விட்டது அம்மா ஏன் என்று கேட்டார். இல்லம்மா, எனக்கு ஜுரம் அடிக்கிறது என்று கூறிவிட்டு வெளியே ஓடி விட்டேன். பக்கத்தில் ஒரு மைதானத்தில் 3 மணி நேரம் கிரிக்கெட் விளையாடி விட்டு மாலை 6:00 மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என்னம்மா வாசலை பெருக்கிக் கொண்டிருந்தார், நான் உள்ளே சென்று அந்த மூன்று புத்தகங்களும் டிவியின் மீது வைக்கப்பட்டு அதன் மீது பேப்பர் வெயிட் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்த தருணத்தில் என் அம்மாவை நான் தெய்வமாக பார்த்தேன். இந்தக் காட்சியை சிறிது வேறு மாதிரி பாருங்கள், இதே 17 வயது சிறுவன் என்னிடத்தில் ஒரு பெண் இருந்திருந்தால் அந்த சுதந்திரம் கிடைத்திருக்குமா? எங்க அம்மா அந்த பெண்ணை துடைப்பத்தால் அடித்து இருப்பார் என்று நினைக்கிறேன். காமம் ஆண்களுக்கு மட்டும் சொந்தமா?
குழந்தையை சுமக்க கூடிய கருப்பையை ஏன் ஆண்களுக்கு கொடுக்கவில்லை? நம்மை விட அவர்கள் ஒரு பங்கு மேலே, நம்மை விட ஒரு மடங்கு மேலே இயற்கை அவர்களை மதிக்கிறது. நம்மை விட வரம் பெற்றவர்கள் பெண்கள். இந்த படத்தை மூன்று ஒளிப்பதிவாளர்களை வைத்து மூன்று விதமான விஷயங்களை முன்னோக்கி எடுத்து சென்று இருக்கிறார் வர்ஷா. வருங்காலத்தில் வர்ஷா இந்தியாவில் மிகச்சிறந்த இயக்குநர்களின் ஒருவராக நிச்சயம் வருவார். இந்த மேடை பொதுவாக ஆண்களால் நிரம்பி இருக்கும், ஆனால் இப்போது பெண்களால் பெண் தன்மையால் நிறைந்து இருக்கிறது. ஒரு படைப்பாளர் என்றால் யார் தெரியுமா ? உள்ளுக்குள்ளும் வெளியேயும் பெண் தன்மை இருப்பவர்கள் தான் உண்மையான படைப்பாளர்கள் அது இளையராஜாவுக்கும் ஏ ஆர் ரகுமானுக்கும் சரியாகப் பொருந்தும்.
வெற்றிமாறன் என்ற சினிமாவை படித்துப் படித்து எழுதி எழுதி இந்த அளவுக்கு வந்திருக்கிறார். அவருடைய பட்டறையில் இருந்து இன்று ஒரு கத்தி வந்திருக்கிறது. ஒரு முள் வந்திருக்கிறது ஒரு பூ வந்திருக்கிறது. முள் குத்தும் குத்தணும் ஆப்பிளை வெட்டுவதற்கு கத்தி தேவைதான். ஆனால், பூவை நாம் கசக்கி விடக்கூடாது.
எனக்கு தெரிந்தவரை தமிழ் சினிமா மற்றும் இந்திய சினிமாக்களிலேயே ஒரு பெண்ணை இவ்வளவு அழகான கோணத்தில் எந்த படமும் காட்டியதில்லை. ஒரு முகப்பருவை கூட காட்டி இருக்கிறார்கள் ஒரு பெண் பரு இல்லாமல் பருவம் அடைய முடியுமா? அந்த பருவினால் எத்தனை போராட்டங்கள் இருக்கும்? என்னுடைய பெண் 13 வயதிலிருந்து மிகவும் போராடிக் கொண்டிருக்கிறாள். நான் அதை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த படத்தை நீங்கள் அனைவரும் கருணையோடு பார்க்க வேண்டும்.
வெற்றிமாறன் இப்படத்தை தயாரித்திருக்கிறார். அவன் நினைத்திருந்தால் பெரிய இயக்குநர்களிடம் கொடுத்து எனக்கு இவ்வளவு சம்பாதித்து கொடுங்கள் என்று கேட்டிருக்கலாம். ஆனால், இந்த நல்ல படம் வர வேண்டும் என்று அவனுடைய பணத்தை செலவழித்து தயாரித்திருக்கிறான். அவனை பாராட்ட வேண்டும். இந்த படத்தை பார்த்துவிட்டு வர்ஷாவை நீங்கள் கொஞ்சமாக திட்டுங்கள். என்னை பலரும் கெட்ட வார்த்தைகள் திட்டுவார்கள் அதை நான் ரசிப்பேன் ஆனால் இந்த குழந்தையை திட்டாதீர்கள் இவள் ஒரு வைரம். ஒருவேளை அவள் இந்தியாவில் தமிழில் முதல் ஆஸ்கர் வாங்கலாம். ஒருவேளை அடுத்த படத்தில் தேசிய விருது வாங்குவாள்.
அவள் எல்லோரையும் போல் ஒரு சண்டைக் காட்சி, ஒரு அறிமுகக் காட்சி மிஷ்கின் படத்தில் வருவது போல குத்து பாடல் பிறகு எதற்கு இந்த கதை என்றே தெரியாமல் தலையை சொரிந்து கொண்டே வெளியில் போகும் படியான படத்தை எடுக்கவில்லை.
இந்த சமூகத்தை அவள் ஏமாற்ற படம் எடுக்கவில்லை. அவள் நினைத்திருந்தால் முதல் படத்தில் 25 லட்சம், இரண்டாவது படத்தில் 40 லட்சம், மூன்றாவது படத்தில் 80 லட்சம் என்று எடுத்துக்கொண்டு போய் இருக்கலாம். ஆனால் அவள் பிறந்தது முதல் 32 வயது வரை அவளுக்கு என்னென்ன வயதில் என்னென்ன நடந்ததோ அதை படமாக்கி இருக்கிறாள். அதை ஒரு மணி நேரம் 59 நிமிடமாக சுருக்கி படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள். அதை நாம் மதிக்க வேண்டும், ரசிக்க வேண்டும்.
நம் எத்தனை மோசமான படங்களை பார்த்திருக்கிறோம் என்று யோசித்து பாருங்கள். நம் குழந்தையை அழைத்துச் சென்று பார்க்க முடியுமா? மனைவியை அழைத்துச் சென்று பார்க்க முடியுமா? சகோதரியை அழைத்துச் சென்று பார்க்க முடியுமா?
ஆனால், இந்த படத்தில் விரசம் இருக்கிறது. அந்த விரசத்தில் விரதம் இருக்கிறது. தெய்வீக தன்மை இருக்கிறது. இது ஒரு முக்கியமான படம் என்று சொல்ல மாட்டேன். ஆனால், நிறைய சாக்கடைகள் இருக்கும் இடத்தில் இப்படம் ஒரு சந்தன கட்டை.
பத்திரிகையாளர்களை பொறுத்தவரை உங்களுக்கு பிடிக்கலாம், அல்லது பிடிக்காமல் போகலாம். எப்படி இருந்தாலும் கொஞ்சம் ஈரத்தோடு எழுதுங்கள். இப்படத்தில் உண்மை இருக்கிறது. அதை உணர்ந்தால், உங்கள் எழுத்தில் மையோடு சேர்ந்து உதிரமும் வரும், கருணையும் வரும். இந்த படத்திற்கு 36 மார்க் ஆவது போடுங்கள். இந்தப் படத்தை ஃபெயில் ஆக்கி விடாதீர்கள்.
வர்ஷா உங்கள் மகள், அவளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
நீண்ட நேரம் அமைதியாக பேசி விட்டேன் இல்லையா?! இப்போதுதான் சர்ச்சை. ஆனால், இது வெற்றிமாறனுக்கு...
ரொம்ப காலமாக வாடிவாசல் -ஐ எதிர்பார்க்கும் பார்வையாளரின் நானும் ஒருவன். ஏனென்றால் தமிழில் இலக்கியம் என்று சொல்லக்கூடிய பொன்னியின் செல்வனுக்கு சுமார் 65 வருடங்கள் கழித்து மணிரத்தினம் சார் உயிர் கொடுத்தார். அதாவது அவருடைய பாணியில் காட்சி அமைப்புகள் அசாதாரணமாக இருந்தன. அதேபோல் 60 வருட காலமாக பாரம்பரியம் என்று கருதப்படுவது வாடிவாசல். அதை எடுக்கக்கூடிய வாய்ப்பு வெற்றிமாறனுக்கும், சூர்யாவுக்கும், தாணு சாருக்கும் வந்திருக்கிறது. கடும் உழைப்பன் என்று சொல்ல மாட்டேன், பெரும் உழைப்பன். கிட்டத்தட்ட பைத்தியக்காரத்தனத்தின் உச்சத்தை தொட்டு தொட்டு நக்கி விட்டு வரக்கூடிய அளவிற்கு பெரிய படைப்பாளி. இந்த வாய்ப்பு வெற்றிக்கு கிடைத்ததற்கு நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். சூர்யா சிறந்த அழகன். ஒரு அறிவாளியும் அழகனும் சேர்ந்தால் அந்த படைப்பு எப்படி இருக்கும் என்று பாருங்கள். இந்த படம் வெற்றி மாறனின் மிகச் சிறந்த படமாக இருக்கும் என்று நம்புகிறேன். சீக்கிரமாக இந்த படம் திரைக்கு வர வேண்டும் என்று வெற்றி மாறனை கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த அஞ்சலி அசாதாரணமாக நடித்திருக்கிறார். இப்படி இருக்கும் படத்தொகுப்பை நிச்சயம் ஒரு ஆண் செய்திருக்க முடியாது. 35 வருடங்களுக்குப் பிறகு சாந்தி பிரியாவை இந்த படத்தில் பார்த்ததில் மகிழ்ச்சி. இந்த படத்தில் ஒரு பக்கம் வீடு, இன்னொரு பக்கம் குழந்தை என்று இரு தலைக்கொல்லி எறும்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சரண்யாவின் நடிப்பை பார்த்து ஆச்சரியமடைந்தேன் என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “முதலில் மிஷ்கினுக்கு நன்றி சொல்லி தொடங்குகிறேன். நேற்று இரவு நீங்கள் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது நான் தூங்கவில்லை. உங்களுடைய ஃபோன் காலுக்காக காத்திருந்தேன். பொதுவாக மிஷ்கின் படம் பார்த்தால் என்ன சொல்லுவார் என்று தெரியும். ஆனால், இந்த படத்தில் வேறு விதமாக கூறினார். அதுதான் இன்றைய பேச்சிலும் வெளிப்பட்டது. இந்த படத்தை இயக்குனரின் பக்கம் இருந்து புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி.
எப்போதும் இயக்குனராக இருப்பது தான் சுதந்திரம், தயாரிப்பாளராக இருப்பது அழுத்தத்திற்குரியதாக இருக்கும். படம் வெளியாவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே இந்த படம் எத்தனை திரையரங்கில் வெளியாகும்? சொல்லப்பட்ட திரையரங்கில் வெளியாகுமா? ஆகாதா? என்றெல்லாம் நிலையாக ஒரு அழுத்தம் இருந்து கொண்டே இருக்கும். இந்தப் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் வட இந்தியாவில் வெளியிடும் அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் நன்றி. இந்தப் படத்திற்கு எஸ் பிக்சர்ஸ் சீனு நிதி கொடுத்திருக்கிறார், அவருக்கு நன்றி.
ஒரு படத்தை இயக்குவதற்கு பொதுவாக ஒரு திடமான உந்துதல் இருக்க வேண்டும். ஆனால், வர்ஷா கொஞ்சம் மிகையான உந்துதல் உள்ளவர். அவர் முதலில் ஓடிடி-க்கு தான் படம் எடுப்பதாக இருந்தார். ஆனால் அங்கு இதுபோல ஒரு ப்ரொடக்ஷன் அமைப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியதால் என்னிடம் வந்து கேட்டார். உடனே நானும் அப்துல் கதை கேட்டும் முதல் 40 நிமிடம் பள்ளியில் நடக்கும் கதையில், நாம் இதற்கு முன்பு அழியாத கோலங்கள், துள்ளுவதோ இளமை போன்ற படங்களை பார்த்திருக்கிறோம். அதில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விதமான வருகையை பார்த்திருக்கிறோம். ஒரு ஆண் தன் பதின் பருவங்களில் அவனுக்கு ஏற்படும் மாற்றங்களை எப்படி கையாளுகிறான்? எப்படி தன்னை வெளிக் காட்டுகிறான் என்பதை பார்த்து இருக்கிறோம். ஆனால் முதல் முறையாக ஒரு பெண், அவளுடைய பருவத்தில் காலடி எடுத்து வைக்கும் போது எதிர் பாலினத்தின் மீது இருக்கக்கூடிய ஆர்வம், 40 நிமிடங்களோடு நின்று விடவில்லை. அவளுக்கு இருந்த கல்வி முறை, வாழ்க்கை முறையை பற்றிய ஒரு விமர்சனம், கேள்வி கேட்கும் படியாக இருந்தது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அதுமட்டுமல்லாமல் படம் முழுக்க அடுத்தடுத்து அந்தந்த காலகட்டங்களில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னென்ன நிகழ்கிறது என்பதை அணுகும் விதமாக அந்த எழுத்து இருந்தது. ஒன்று இரண்டு விஷயங்களை தவிர, இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரையும் தேர்வு செய்தது வர்ஷா தான்.
அதுபோல ஒரு படத்திற்கு பல விதங்களில் பணியாற்றினாலும், இறுதியாக பத்திரிக்கையாளர்களிடம் வந்து இந்த படத்தை அனைவருடமும் கொண்டு சேருங்கள் என்பது மட்டும் மாறாமல் இருக்கும். நிறைய நிறுவனமும், நிறைய செல்வாக்கும் உங்களிடம் இருக்கிறது ஆகையால் நீங்கள் தான் இந்த படம் எப்படி என்று தேர்வு செய்ய வேண்டும். மிஷ்கின் சொன்னது போல் இந்த படத்தை எப்படி பார்க்க வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன். அது உங்களுடைய விருப்பம்.
முந்தைய தலைமுறையிடமிருந்து சில விஷயங்களை நாம் கற்றுக் கொள்கிறோம், அதை நடைமுறைப்படுத்துகிறோம். என் அம்மா தலைமுறையில் அம்மா வேலைக்கு சென்றார். வீட்டிற்கு வந்தும் அவர்தான் வேலை செய்வார். அப்பா எதுவும் செய்ய மாட்டார். என்னுடைய தலை முறை வரைக்கும் அப்படித்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால், இன்றைய தலைமுறையினர் அப்படி அல்ல, இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். இருவரும் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப அந்தந்த தலைமுறையினர் அதற்கு ஏற்றவாறு வாழ்க்கையை மாற்றிக் கொள்கிறார்கள். ஆகையால், இந்த தலைமுறையினர் முந்தைய தலைமுறையினரை விமர்சிப்பது தவறு, அதேபோல் முந்தைய தலைமுறை இந்த தலைமுறையினரை விமர்சிப்பதும் தவறு.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை அம்மாவும் பொண்ணும் இருக்கிறார்கள் அந்த அம்மாவிற்கும் பெண்ணுக்கும் இருக்கும் இடைவெளியைக் கடக்க முயற்சி செய்வதும் அதை கடந்தார்களா? இல்லையா? எந்த புள்ளியில் அவர்கள் அதை கடக்க முயற்சி செய்தார்கள்? ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்தார்கள்? என்பதை ஒரு அழகான ஓவியமாக இந்த படம் கூறுகிறது. ஒரு தாய் மகள் அவரவர்களுக்கு இருக்கும் குறைகளோடு அவர்களை ஏற்றுக் கொள்கிறார்கள் என்கிற அளவோடு தான் நான் பார்க்கிறேன்.
இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல வேண்டும். இப்படத்தில் படப்பிடிப்பிற்கு இரண்டு முறை நான் சென்றிருந்தேன்.
இந்த படத்தின் சில காட்சிகளை இந்த காலத்து இளைஞர்கள் ஒரு ஆயிரம் பேருக்கு காட்டினால் எப்படி பார்ப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், அனைவரும் கைதட்டினார்கள், ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. என்னுடைய காலத்தில் பசங்க பார்த்திருந்தால் இந்த அளவிற்கு ரசித்திருக்க மாட்டார்கள். என்னுடைய தலைமுறையிலிருந்து இந்த தலைமுறை மிகவும் மாறியிருக்கிறது. அவர்கள் வாழ்க்கையை பார்க்கும் விதம் உறவுகளை பார்க்கும் விதம் வேறு விதமாக இருக்கிறது. அதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
பாட்டி, அம்மா, பொண்ணு என மூன்று தலைமுறை. அம்மா ஒரு விஷயத்திற்காக மகளை கேவலமாக பார்ப்பார்கள். பாட்டி வேறு ஒரு விஷயத்திற்காக அம்மாவை கேவலமாக பார்ப்பார்கள். ஒவ்வொரு தலைமுறையினரும் எப்படி பார்க்கிறார்கள் என்பதை நீங்கள் படத்தில் பார்க்கும் போது உங்களுக்கு புரியும்.
அம்மா, பொண்ணு, பாட்டி மூவரையும் பார்க்கும் போது உண்மையான உறவுகளாகத்தான் இருந்தது. என் வீட்டிலும் இது நடக்கும். என் அம்மாவும் அக்காவும் பயங்கரமாக சண்டை போட்டுக் கொள்வார்கள். இதற்கு மேல் இவர்கள் பேசிக்கொள்ளவே மாட்டார்கள் என்று தோன்றும். ஆனால், இரண்டு நாட்களிலேயே ஃபோனில் இயல்பாக எதுவுமே நடக்காதது போல் இயல்பாக பேசுவார்கள். நான் இப்படி சண்டை போட்டால் இயல்பு நிலைக்கு வருவதற்கு குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகும்.
இதுபோல இந்த படத்தில் காட்சி அமைப்பு இயல்பாக இருந்தது. ஒட்டுமொத்த படமும் பார்ப்பதற்கு ஒரு காட்சியில் இருந்து இன்னொரு காட்சி என்று அனைத்து காட்சிகளுக்கும் ஒரு இணைப்பு இருந்தது.
இப்படத்தை அனுராக் பார்த்தார். முதல் பாதி பார்த்ததுமே இதுதான் படம். இன்னொரு பாதியையும் நான் பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக கேட்டார். முழு படமும் பார்த்து முடித்ததும் இப்படத்திற்கு அமித் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். நாங்கள் சந்தோஷிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று கூறினேன். ஆனால், அந்த சமயத்தில் சந்தோஷ் பெரிய படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்ததால் அமீத்-தை மும்பையில் நேரில் சந்தித்து வர்ஷா பேசினார்.
தயாரிப்பாளராக இருக்கும்போது வணிக ரீதியாக படம் பாதிக்கக் கூடாது என்பதற்காக சில விஷயங்களை பார்த்து தான் பேச வேண்டி இருக்கிறது. நீதிமன்ற ஆணை வந்திருக்கிறது, அது மனுஷி படத்திற்கு தான்.
இந்தப் படத்திற்கு யுஏ 16 + சான்றிதழ் வாங்கி இருக்கிறோம்.
இனிமேல் க்ராஸ் ரூட் நிறுவனத்திலிருந்து படம் தயாரிக்க போவதில்லை. பேட் கேர்ள் தான் கடைசி படம்.” என்றார்.
பாவனா மோகன் பேசுகியில், “இன்று இங்கே இருக்கிறேன் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை நம்பிய வர்ஷாவுக்கு நன்றி. படம் முழுவதையும் இன்னும் பார்க்கவில்லை, ஆனால் அந்த அனுபவத்தை நான் உணர்ந்தேன். ஒரு கலைஞராக எனக்குத் தேவையான இடத்தை வர்ஷா கொடுத்தார். அஞ்சலியும் தினமும் என்னை எனது பணி செய்ய சுதந்திரமாக அனுமதித்தார். ஒவ்வொரு காட்சியிலும் அஞ்சலி அழகாக இருந்தார். இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு அதிஷ்டசாலியாக உணருகிறேன்.” என்றார்.
ஆடை வடிவமைப்பாளர் ஸ்ருதி பேசுகையில், “இந்த படத்தில் என்னையும் வேலை செய்ய வைத்ததற்காக வர்ஷாவுக்கு நன்றி. இப்படத்தில் பணியாற்றியது எனக்கு பெருமையாக இருக்கிறது. படத்தின் ஆடைகள் எளிமையானதாகவும் இயல்பானதாகவும் இருக்க நாம் கவனம் எடுத்தோம். இப்படிப்பட்ட படத்தில் வேலை செய்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. அனைவருக்கும் நன்றி.” என்றார்.
பாடலாசிரியர் கேபர் வாசுகி பேசுகையில், “எல்லாருக்கும் வணக்கம். என் பெயர் கேபர் வாசுகி. நான் ஒரு இண்டிபென்டன்ட் ஆர்டிஸ்ட். வர்ஷாவை நான் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன்.
அப்போது அவர் நான் வெற்றிமாறன் சாருடைய துணை இயக்குனர் என்றார். அப்போது, ஏதாவது வேலை இருந்தால் சொல்லுங்கள் என்று சொல்லியிருந்தேன். அதன் பின் அவர் படத்தைப் பற்றி பேசும்போது, இப்படத்தின் குழுவில் பெரிதாக பெண்கள் தான் இருக்கிறார்கள் என்றார்.
அப்போது, நமக்கு பெரிய வேலை ஏதும் இருக்காது என்று நினைத்தேன். அதன்பின், சில நாட்கள் கழித்து ஒரு பாடல் உள்ளது அதை எழுதுகிறீர்களா? என்று கேட்டார். தாராளமாக, என்று சொல்லி தான் நான் இப்படத்திற்குள் வந்தேன். "ப்ளீஸ் என்ன அப்படி பாக்காத, அங்கிள் என்ன அப்படி பாக்காத" என்ற பாடலை எழுதியுள்ளேன். ஒரு 16 வயது நிரம்பிய பெண்ணின் பார்வையிலிருந்து இப்பாடலை எழுதியிருக்கிறேன்.
"பேட் கேர்ள்" திரைப்படம் ஒரு கதையாகவே எனக்கு பிடித்திருந்தது, ஒவ்வொரு 10 வருடத்திற்கும் ஒரு படம் அந்த சூழ்நிலையை மையமாக கொண்டு வெளியாகும். அந்த வகையில் இப்படம் இருக்கிறது. செப்டம்பர் 5ம் தேதிக்கு மேல் இப்படத்தை பற்றி பலரிடம் பேசுவேன், வர்ஷா மற்றும் வெற்றிமாறன் சார் அவர்களுக்கு நன்றி.” என்றார்.
பாடகர் சுபலாஷினி பேசுகையில், “நான் முதல் முறையாக ஒரு திரைப்படத்திற்கு பாடல் எழுதியுள்ளேன், இந்த வாய்ப்பு கொடுத்த வர்ஷாவுக்கு நன்றி. கேபர் வாசுகி சார் தான் என்னை வர்ஷாவுக்கு அறிமுகம் செய்தார் அவருக்கு நன்றி. முதல் முறையாக அமித் திரிவேடி சார் அவர்களின் இசையில் பாடியது மகிழ்ச்சி.” என்றார்.
நடிகை சரண்யா பேசுகையில், “வர்ஷா அவர்களுக்கு நன்றி. முக்கிய காரணம், நான் வடசென்னை படத்தில் நடிக்கும் போது, நான் படம் நிச்சயம் அப்படத்தில் இருப்பீர்கள் என்று சொன்னார். நான் அனைவரையும் போல் ஐவரும் பேசுகிறார் என்று நினைத்து அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அவர் இப்படத்தில் என்னை அழைத்து எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வெற்றி சாருக்கும் நன்றி. அவர் படத்தில் அதிகம் ஆண்களுக்கு தான் வாய்ப்பு இருக்கும், அப்படி பட்ட அவர் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. அஞ்சலி மிகவும் இனிமையானவர், நானும் அவரும் நண்பர்களாக நடித்துள்ளோம். என்னுடைய குழுவில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.
நடிகை சாந்தி பிரியா பேசுகையில், “எனக்கு எங்கு இருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. செண்பகம் செண்பகம் என்று சொல்லி 35 ஆண்டுகள் ஓடிவிட்டனர். மீண்டும் திரைக்கு வருவது மகிழ்ச்சியாக உள்ளது. அன்று போல் இன்றும் எனக்கு தமிழ் திரைத்துறை அதே அன்பை கொடுக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.
நடிகை அஞ்சலி பேசுகையில், “இந்தப் பயணம் எனக்கு எவ்வளவு அற்புதமாக இருந்தது என்பதை முதலில் சொல்ல விரும்புகிறேன். இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாக பார்க்கிறேன். என் வாழ்க்கைப் பயணத்தில் இதுவரை கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை வழங்கிய வர்ஷாவுக்கு நன்றி. மேலும், வெற்றிமாறன் சாரின் ஆதரவில்லாமல் இன்று நான் இந்த இடத்தில் இருக்க முடியாது. அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் யாரையும் குறிப்பிடாமல் விட்டிருந்தால் அதற்காக மன்னிக்கவும்.
இந்தக் கதாபாத்திரத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவள் மிகுந்த வலிமையுள்ள பெண். அதே நேரத்தில் மிக மென்மையான, நகைச்சுவை உணர்வு கொண்டவள். சற்று கவனக்குறைவாகவும், சீரற்ற தன்மையுடனும் இருப்பவள். ஆனால் அவளது அந்தக் குறைகளே அவளை தனித்துவமானவளாக மாற்றுகின்றன.
இந்த படம் எங்களுக்கு ஒரு ஆழ்ந்த உணர்வை வழங்கியுள்ளது. அதேபோல், இது உங்களின் உள்ளங்களையும் தொட்டு, ஒரு புதிய அனுபவத்தை அளிக்கும் என நான் நம்புகிறேன். நன்றி.” என்றார்.