Feb 21, 2026 02:24 PM

கமல் - ரஜினி இணையும் படத்தின் ஹீரோ யாரு தெரியுமா ?

கமல் - ரஜினி இணையும் படத்தின் ஹீரோ யாரு தெரியுமா ?

இந்திய திரையுலகம் மறக்க முடியாத வரலாற்று தருணத்தை காணத் தயாராகிறது. இந்திய சினிமாவின் இரு பெரும் நாயகர்கள் — ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் — 47 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரே படத்தில் இணைகின்றனர். தற்காலிகமாக “KHxRK” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மாபெரும் திரைப்படம், ரசிகர்களுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் சிறப்பான திரை அனுபவமாக அமையும்.

 

1970களின் இறுதியில் கடைசியாக இணைந்து நடித்த இந்த இரு திரை ஜாம்பவான்கள், தற்போது மீண்டும் இணைவது இந்திய திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. தலைமுறைகளை தாண்டி ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய இரண்டு அபாரமான கலைப் பயணங்கள், இத்திரைப்படத்தின் மூலம் ஒன்றாக சங்கமிக்கின்றன.

 

இந்த மாபெரும் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இந்த வரலாற்றுச் சந்திப்பை சாத்தியமாக்கியதில் பெருமை கொள்கின்ற தயாரிப்பு நிறுவனம், இந்தப் படத்தை அளவிலும், பாரம்பரியத்திலும், கதை சொல்லுதலிலும் உயர்ந்த தரத்தில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

 

நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். 

 

இந்த நிலையில், இப்படம் தொடர்பான அறிவிப்பு வீடியோ ஒன்று வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக, அந்த வீடியோவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும், படத்தின் ஹீரோ யாரு ? என்று கேட்பதும், அதற்கு பதிலளிக்க முடியாமல் இயக்குநர் நெல்சன் முழிப்பதும், படத்தை பற்றிய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இப்படம் குறித்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ரஜினிகாந்த் அவர்களையும் கமல்ஹாசன் அவர்களையும் 47 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே படத்தில் இணைப்பது எங்களுக்கெல்லாம் ஒரு கனவு நனவாகும் தருணம். இந்த வரலாற்று மற்றும் உணர்ச்சிமிகு தருணத்தை சாத்தியமாக்குவதில் எங்களுக்கு மிகுந்த பெருமையும் நன்றியும் உள்ளது. அவர்களின் அபாரமான பாரம்பரியத்தை சிறப்பிக்கும் வகையில் ஒரு வலுவான திரை அனுபவத்தை உருவாக்க எங்கள் முழு அர்ப்பணிப்புடன் இந்தப் பயணத்தை தொடங்குகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.