Jun 23, 2019 02:13 PM

நடிகர்கள் சங்க தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தது! - வாக்கு எண்ணிக்கைக்கு தடை

நடிகர்கள் சங்க தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தது! - வாக்கு எண்ணிக்கைக்கு தடை

தமிழ் சினிமாவில் இருக்கும் பல சங்கங்களில் தென்னிந்திய நடிகர்கள் சங்கமும் ஒன்று. சுமார் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை உறுப்பினர்கள் இருக்கும் இந்த சங்கத்தில் திரைப்பட நடிகர்கள் மட்டும் இன்றி நாடக நடிகர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

 

பொதுவாக சினிமாத்துறையில் இருக்கும் சங்கங்களில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் மட்டுமே முக்கியத்துவம் பெற்று வந்த நிலையில், கடந்த முறை நடைபெற்ற நடிகர் சங்கம் தேர்தல் ஒட்டு மொத்த சினிமாத்துறையை பொதுமக்கள் திரும்பி பார்க்க கூடிய விதத்தில் நடைபெற்றது. இதன், மூலம் இந்த முறை நடிகர் சங்கத்தின் தேர்தலும் பெரும் பரபரப்புடன் நடைபெற்றது.

 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுடன், கடந்த தேர்தலில் நாசர், விஷால் மற்றும் கார்த்தி அணிக்கு ஆதரவாக இருந்த ஐசரி கணேஷ், திடீரென்று தனி அணி ஒன்றை உருவாக்கி அதில் கே.பாக்யராஜை தலைவர் பதவிக்கு போட்டியிட வைத்ததன் மூலம், இந்த வருட நடிகர் சங்க தேர்தல் சூடு பிடிக்க தொடங்கியது. கடந்த முறை சரத்குமார் மற்றும் ராதாரவி அணியை வீழ்த்திய நாசர், விஷால் மற்றும் கார்த்தி அணியினருக்கு எதிராக உருவான ஐசரி கணேஷின் அணி மீது பலவிதமான புகார்கள் எழுந்த நிலையில், தமிழக அரசு நடிகர் சங்க தேர்தலில் தலையிடுவதாக விஷா பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

 

இதற்கிடையே, தமிழக அரசு சார்பில் நடிகர்கள் சங்க தேர்தலுக்கு தடை விதிக்கப்பட, விஷால் கூறிய குற்றச்சாட்டு உண்மை தானோ என்று எண்ண தோன்றியது. பிறகு நாசர் தலைமையிலான அணியினர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த பிறகு, ஏற்கனவே அறிவித்ததுபடி ஜூன் 23 ஆம் தேதி (இன்று) ந்படிகர் சங்க தேர்தலை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால், இடத்தை மட்டும் மாற்றிக்கொள்ளும்படி அறிவுறுத்தியது.

 

அதன்படி, சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நடிகர் சங்கம் தேர்தல் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. இதில் கமல்ஹாசன், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தங்களது வாக்கை பதிவு செய்தனர். ரஜினிகாந்த், அஜித் ஆகியோர் ஓட்டுப்போட வரவில்லை.

 

அதேபோல், நயன்தாரா, திரிஷா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகள் யாரும் ஓட்டுப்பொட வரவில்லை.

 

மொத்தத்தில், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் உள்ள மொத்த உறுப்பினர்களான 3171 பேர்களில் இன்றைய தேர்தலில் 1604 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

 

மேலும், இரண்டு வாரங்களுக்குப் பிறகு நீதிமன்றம் அறிவிக்கும் நாளில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.