May 31, 2020 08:56 AM

டேனியல் பாலாஜிக்கு ஆதரவு தெரிவித்த காயத்ரி ரகுராம்!

டேனியல் பாலாஜிக்கு ஆதரவு தெரிவித்த காயத்ரி ரகுராம்!

ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாக உள்ள வெப் சீரிஸ் ‘காட்மேன்’. விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ படத்தை இயக்கி வரும் பாபு யோகேஸ்வரன் இயக்கியிருக்கும் இந்த வெப் சீரிஸில் ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

சமீபத்தில் வெளியான இந்த வெப் சீரிஸின் டீசரில், “என்னை சுற்றி இருக்கும் அத்தனை பிராமணர்களும் அயோக்கியர்கள்” என்று ஒருவர் பேசுகிறார். மேலும், காவி உடை, உதிராட்சை மாலை என்று சாமியார் உடையில் இருக்கும் டேனியல் பாலாஜி, சில பெண்களுடன் உல்லாசத்தில் ஈடுபடும் சில காட்சிகளும் இடம்பெற்றது.

 

மொத்தத்தில், பிராமண சமூகத்தை கடுமையாக விமர்சிக்கும் வகையில் இருந்த இந்த டீசரால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வெப் சீரிஸை இயக்கியவர், தயாரித்தவர் மற்றும் நடித்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்து அமைப்புகள் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.

 

Godman

 

இந்த நிலையில், பிராமணர்களுக்கு எதிரான கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசி வரும் நடிகையும், பா.ஜ.க பிரமுகருமான காயத்ரி ரகுராம், இந்த ‘காட்மேன்’ விவகாரத்தில் டேனியல் பாலாஜிக்கு ஆதரவாக பேசியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

 

இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் காயத்ரி ரகுராம், “இது போன்ற பிராமணர்களுக்கு எதிரான படங்களை வன்மையாக கண்டிக்க வேண்டும். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அதே சமயம், இதுபோன்ற தொடர்களில் நடிக்கும் நடிகர், நடிகர்கள் மீது எந்தவித தவறும் இல்லை. அவர்கள் இயக்குநர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். எனவே, காட்மேன் தொடரை தயாரித்தவர்கள் மற்றும் இயக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

 

மேலும், டேனியல் பாலாஜி கிறிஸ்தவர் அல்ல. அவர் ஒரு இந்து தான். ‘சித்தி’ சீரியலில் டேனியல் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததால் தான் அந்த பெயர் அவருடன் ஒட்டிக்கொண்டது. அவரது இயற்பெயர் பி.சி.பாலாஜி என்பது தான்.” என்று தெரிவித்துள்ளார்.