Jul 02, 2019 08:20 AM

நெப்போலியன் நடிக்கும் ஹாலிவுட் படம் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’

நெப்போலியன் நடிக்கும் ஹாலிவுட் படம் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’

அமெரிக்காவில் செட்டிலாகியுள்ள நெப்போலியன் தற்போது ஹாலிவுட் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். 

 

கிரிஸ்டல் கிரீக் மீடியா, கைபா பிலிம்ஸ் தயாரிப்பில் டானியல் நட்சன் இயக்கத்தில் உருவாகும் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிகர் நெப்போலியன் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தில் ஷீனா மோனின், ராபர்ட் லெனன், ஆரன் நோபிள் உள்ளிட்ட பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

 

முழுநேர வேலைப் பறிபோன நிலையில், முன்னாள் ஸ்கேட்டிங் சாம்பியனான கோர்ட்னி, தன்னுடைய நண்பரின் உறைந்த குளத்தில், ஸ்கேட்டிங் பயிற்சியாளராக தனது பணியை தொடங்குகிறார். கூடுதல் மாணவர்களை ஈர்க்கும் விதத்தில் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ ஒன்றை வடிவமைத்து, தனது மருமகளுடன் விநியோகித்து வருகிறார்.

 

இந்நிலையில் அவரது பள்ளிப்பருவ காதலன் ஆரன் நோபிள் தனது மருமகளை ஸ்கேட்டிங் பயிற்சியில் சேர்ப்பதற்காக கோர்ட்னியை சந்திக்கிறார். காரணம் சொல்லாமல் பிரிந்து சென்ற பள்ளிப்பருவ காதலன் ஆரன், அதன் பாதிப்புகளில் இருந்து போராடி மீண்டு, வாழ்க்கையை சீரமைத்துக் கொண்டிருக்கும் கோர்ட்னி, பல ஆண்டுகளுக்கு பின் நடந்த இந்த சந்திப்பு, அதன் தாக்கம் என்ன, அவர்கள் வாழ்வில் நடந்ததென்ன, காதலர்கள் மீண்டும் இணைந்தார்களா, என்பதே இப்படத்தின் கதைகளம். 

 

உணர்வுகளின் கொந்தளிப்பில் இருக்கும் பள்ளிப்பருவ காதலுக்கும், வாழ்வின் யதார்த்தங்களும், நிதர்சனங்களும் புரிந்த நிலையில் அதனை அணுகும் போதும் உள்ள வித்தியாசத்தையும் மிகவும் நளினமாகவும், சுவராஸ்யமாகவும் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் டானியல்.  

 

இப்படத்தில் கோர்ட்னி மாத்யூஸ், ஆரன் நோபிள், ஷீனா மோனின், ராபர்ட் லெனன் ஆகியோருடன் இணைந்து, ஏஜண்ட் குமார் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நெப்போலியன் நடித்திருக்கிறார்.

 

Christmas Coupon

 

இப்படத்திற்கு டாம் ரோட்ஸ், ட்ரூ ஜாகப்ஸ் ஆகியோரின் உன்னதமான பங்களிப்புடன் சியன் ஆண்டனி கிஷ் இசையமைத்திருக்கிறார்.   

 

இத்திரைப்படத்தில் மிச்சிகன் மாகாணத்தின் எழில் கொஞ்சும் ஏரிகள், பச்சை புல்வெளிகள், டெட்ராய்ட் நகரின் நவீன தொழில்துறை மையங்கள், தனித்துவமான நான்கு பருவநிலைகள் என மிகவும் பிரமிப்புடன் ரசிக்கதக்க வகையில் படமாக்கியிருக்கிறார்கள்.  

 

கிறிஸ்டல் கிரீக் மற்றும் கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனநர் டானியல் நட்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம், விரைவில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் பலவற்றில் வெளியாக உள்ளது.