Sep 17, 2021 05:18 AM

என் மகனுக்காக என் பாணியை மாற்றிக் கொண்டேன் - இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்

என் மகனுக்காக என் பாணியை மாற்றிக் கொண்டேன் - இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நான் கடவுள் இல்லை. அவருடைய 71 வது திரைப்படமான இப்படத்தில் சமுத்திரக்கனி, சரவணன், இனியா, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

 

இதில் இயக்குநர்கள் இயக்குநர்கள் எம்.ராஜேஷ், பொன்ராம்,  நடிகைகள் இனியா, சாக்ஷி அகர்வால், குழந்தை நட்சத்திரம் டயானா, நடிகர்கள் அபி சரவணன், யுவன் மயில்சாமி, ,தயாரிப்பாளர் விமலா பிரிட்டோ, இசையமைப்பாளர் சித்தார்த் விபின், ஒளிப்பதிப்பதிவாளர் மகேஷ் கே.தேவ், படத்தொகுப்பாளர் பிரபாகர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

படத்தின் ட்ரெய்லரைத்  தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ   வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பெற்றுக்கொண்டார்.

 

படம் குறித்து பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், “’சட்டம் ஒரு இருட்டறை’, ‘சாட்சி’, ’நான் சிகப்பு மனிதன்’, ‘நீதிக்கு தண்டனை’ போன்று எனக்கென்று ஒரு வகையான பாணியில் படங்கள் எடுத்து வந்தேன். சமூக திரில்லர் அதில் சட்டம் எப்படி புகுந்து விளையாடுகிறது என்கிற வகையில் படம் எடுப்பேன். ‘சட்டம் சந்திரசேகர்’ என்ற பெயரே எனக்கு இருந்தது. என் மகன் நடிக்க ஆசை பட்டதால் 1992-ல் என் பாணியை மாற்றிக்கொண்டேன்.

 

’ரசிகன்’, ‘விஷ்ணு’ போன்ற படங்களை இளைஞர்களுக்காக எடுத்தேன். இப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு  என்னுடைய பழைய பாணியில் சோஷியல் த்ரில்லரை சமூக அக்கறை கொண்ட படமாக எடுத்திருக்கிறேன். எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் நான் பிறந்து வருவேன் என்று கிருஷ்ணர் சொல்வதாகக் கீதையில் சொல்லப்பட்டுள்ளது. அதே கருவை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. நிச்சயம் இந்தப் படத்தில் ஒரு புது விஷயம் சொல்லி இருக்கிறேன். இதுவரை தமிழில் வராத விஷயத்தை நான் சொல்லியிருக்கிறேன். சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை, தீயவர்களால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறது. அது கேட்கப் படுகிறதா இல்லையா என்பதுதான் கதை. 

 

அமெரிக்காவில் கூட ஒரு சிறுவன் கடவுளுக்கு கடிதம் எழுதி வெள்ளை மாளிகையில் இருந்து உதவி வந்ததாக சமீபத்தில் வாட்ஸ்-அப்பில் படித்தேன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

 

Naan Kadavul Illai

 

இந்தப் படம் போன லாக் டவுன் கொரோனா காலத்தில் தொடங்கப்பட்டது. அதாவது போன ஆண்டு மே மாதம் முதல் ஐந்து மாதங்கள் நான் சேவியர் பிரிட்டோவின் ரிசார்ட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு தங்கியிருந்தேன். அப்போது என்ன செய்வது? என்னால் உழைக்காமல் இருக்க முடியாது. அப்போது  தனி ஒருவனாக என்னால் உருவாக்கப்பட்டது தான் இக்கதை. செப்டம்பரில் படப்பிடிப்பை தொடங்கி முடித்துவிட்டோம்.

 

இங்கே இயக்குநர்கள் இருக்கிறார்கள் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். எப்போதும் நல்லதைச் சொல்ல வேண்டும். தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும். உண்மைகளைப் பேச வேண்டும், அதனால் பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை. தயங்கக் கூடாது. நான் எல்லா இயக்குநர்களுக்கும் சொல்கிறேன், தைரியமாக உண்மையைப் பேசுங்கள். தைரியமாகக் கருத்துகளைச் சொல்லுங்கள், எல்லா இயக்குநர்களும் தைரியமாக இருக்க வேண்டும். சமூக சிந்தனையுடன் இருக்க வேண்டும். சமூக நோக்கத்துடன் படம் எடுக்க வேண்டும். 

 

எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் மனிதராக இருக்க வேண்டும். சமுத்திரக்கனி ஒரு நல்ல மனிதராக இருப்பவர். என்னைப்போலவே சமூகக் கோபம் கொண்டவர். மனித நேயம் மிக்கவர், பணமெல்லாம் அதற்குப்பிறகுதான் என்று இருப்பவர். இப்படத்தின் மூலம் நல்ல மனிதர்களுடன் பயணம் செய்த உணர்வு எனக்கு உள்ளது.” என்றார்.