Sep 24, 2019 06:25 PM

”மார்க்கெட் ராஜா மூலம் நான் திரும்ப வந்துவிட்டேன்” - இயக்குநர் சரண் அறிவிப்பு

”மார்க்கெட் ராஜா மூலம் நான் திரும்ப வந்துவிட்டேன்” - இயக்குநர் சரண் அறிவிப்பு

’காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘ஜெமினி’, ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கும் இயக்குநர் சரண், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’. பிக் பாஸ் ஆரவ் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் காவ்யா தப்பார் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதிகா, நாசர், ரோகிணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

சுரபி பிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்ய, சைமன் கே.கிங் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ராதிகாவுக்கு ‘நடிகவேள் செல்வி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சரண், “இந்த மேடை மட்டுமல்ல எந்த மேடையையும் எனக்கு தந்த இயக்குநர் இமயம் பாலச்சந்தர், நண்பர் அஜித், தயாரிப்பாளர் சுரபி மோகன் அனைவருக்கும் நன்றி.

 

அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்வது, நான் வந்துவிட்டேன் மார்க்கெட் ராஜா மூலம் திரும்ப வந்துவிட்டேன். வசூல்ராஜா எனக்கு தலை என்றால் மார்க்கெட் ராஜா எனக்கு பாதம். இனிமேல் நான் நடைபோடுவேன். இப்படத்தில்  அமர்ககளம் படத்திற்கு நேரெதிரான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ராதிகா மேடம். என் படங்களில் வைரமுத்து பரத்வாஜ் இல்லாத குறையை போக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் சைமன் கே கிங். இந்தப் படத்தில் வேற லெவல் எனச் சொல்லக்கூடிய உழைப்பைத் தந்திருக்கிறார் என் தம்பி கே.வி.குகன். என் அம்மா இருந்து எங்களைப் பார்த்திருக்க வேண்டும். ஆரவ் இந்தப்படத்தில் இரு வேறு சாயலில் நடிக்க வேண்டும் ஒரு தேர்ந்த நடிகர் போல  நடித்திருக்கிறார். அவர் தமிழ் சினிமா தாதாவாக மாறுவார். இந்தப்படம் அனைவரும் ரசிக்கும்படியான கமர்ஷியல் படமாக இருக்கும்.” என்றார்.

 

நடிகை ராதிகா பேசுகையில், “என்னை விழாவுக்கு அழைத்த போது இந்த அளவு கொண்டாடிவார்கள் என எதிர்பார்க்கவே இல்லை. என் அப்பாவின் நினைவும் போற்றப்படுவதில் மகிழ்ச்சி. நான் முதன் முதலில் பாரதிராஜா படத்தில் நடித்த போது என் தந்தை ஆச்சர்யப்பட்டார். நான் சினிமாவில் எதிலும் ஆர்வம் இல்லாமல் இருந்தவள். முதன் முதலாக  நடிக்கும் போது மேக்கப்பை தொட்டு என் தொழில் உன்னிடம் இருக்கட்டும் என என்னை ஆசிர்வதித்தார். அவரது ஆசிர்வாதம் தான் என்னை இந்த இடத்தில் சேர்த்திருக்கிறது. இந்தப்படத்தில் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். இந்தப்படத்தில் என் கேரக்டர் என் அப்பாவின் சாயல்கொண்டது. அது தான் இந்தப்பட்டம் எல்லாம் கொடுப்பதை சரணுக்கு ஞாபகப்படுத்யியிருக்கும் என நினைக்கிறேன். எதுவானலும் எனக்கு இப்பட்டம் அளித்ததற்கு நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.

 

Market Raja MBBS

 

நாசர் பேசுகையில், “இந்த விழாவில் கலந்து கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நடிகவேள் செல்வி எனும் பட்டத்திற்கு ராதிகா தகுதியானவர். சரத்குமார் சொன்னது போல் அவர் இன்னும் பல உயரங்களுக்கு தகுதியானவர். ஒரு படத்தில் சிலையாக நடிக்கச் சொன்னாலும் அந்தப்படத்தில் சிலை நன்றாக நடித்திருகிறது என்கிற பெயரைப் பெற்றித் தருவார் ராதிகா. அவருக்கு வாழ்த்துகள்.

 

இந்தப்படத்தில் இளைஞர்களுக்கு இணையான ஒரு உருவாக்கத்தை தந்திருக்கிறார் இயக்குநர் சரண். இயல்பிலேயே அவர் பல திறமைகள் வாய்ந்தவர். நாயகன் ஆரவ்வுடன் தொடர்ந்து இரு படங்களில் நடித்தேன் இரண்டிலும் வேறு வேறு ஆளாக இருந்தார் பின்னணியில் தன் கதாப்பாத்திரத்திற்கு அத்தனை உழைத்திருக்கிறார். படத்தில் இதுவரை நான் நடித்த மாதிரி இருக்கக் கூடாது என கேட்டு வேறு மாதிரியான நடிப்பை வாங்கியிருக்கிறார் சரண். இப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் கே.வி.குகன் பேசுகையில், “இந்தப்படம் ஒரு குடும்பத்தோடு பயணித்தது போல் இருந்தது. இன்று நான் ஒளிப்பதிவாளராக இருக்க மிக முக்கிய காரணம் என் அண்ணன் சரண். பல கஷ்டங்களுக்கு பிறகு வந்திருக்கிறார். அவருக்கு இந்தப்படம் பெரும் வெற்றி பெற வேண்டும். இன்னும் நிறைய வெற்றி படங்கள் அவர்  இயக்க வேண்டும்.” என்றார்.

 

இசையமைப்பாளர் சைமன் கே கிங் பேசுகையில், “555 படத்திலிருந்தே தயாரிப்பாளர் மோகன் சாரைத் தெரியும். சரண் சாருடன் படம் பண்ணப்போகிறோம் என்றபோது முதலில் பயந்தேன். அவரது எல்லாப்படத்திலும் பாடல்கள் பெரிய  ஹிட். அதற்கு காரணம் அவர் எப்போதும் இளமையாக இருக்கிறார்.  புதுமைகளை ரசிப்பவர். அவருடன் வேலை செய்தது என்னை நிறைய மாற்றியது. இந்தப்படத்தின் பாடல்களுக்கு கிடைத்த அனைத்து வரவேற்புக்கும் பின் நிறைய பேரின் உழைப்பு இருக்கிறது. உழைத்த  எல்லோருக்கும், வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

ஹீரோ ஆரவ் பேசுகையில், “இது என்னுடைய முதல் படம். பிக்பாஸுக்கு பிறகு எனக்கு தொடர்ந்து இரண்டு படங்களில் நாயகனாக வாய்ப்பு தந்தார் மோகன் சார் அவருக்கு நன்றி. நான் புதுமுகம் எனக்கு கதை சொல்லி என்னை சம்மதிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால் அதைச் செய்தார் சரண் சார், அவருக்கு நன்றி. ராதிகா மேடமுடன் நடிக்க ஆசைப்பட்டேன், ஆனால் இந்தப்படத்தில் அவர் நடித்திருக்கும் அம்மா ரோல் எல்லோருக்கும் சர்ப்ரைஸ்ஸாக இருக்கும். காவ்யா தப்பார் அழகான திறமையான பெண். மார்க்கெட் ராஜா பக்காவான கமர்ஷியல் படம் எல்லொருக்கும் பிடிக்கும்படி இருக்கும் பாருங்கள் ஆதரவு தாருங்கள்.” என்றார்.