Dec 23, 2019 05:11 PM

வெற்றிமாறனுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

வெற்றிமாறனுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக திகழும் வெற்றிமாறன், நடிகர் தனுஷை வைத்து இயக்கிய ‘வட சென்னை’ மற்றும் ‘அசுரன்’ இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதிலும், ‘அசுரன்’ படத்தின் அசுரத்தனமான வெற்றியால் இயக்குநர் வெற்றிமாறன் இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநராக உருவெடுத்துள்ளார்.

 

இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், சூர்யா, வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளது. அதேபோல், காமெடி நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை வெற்றிமாறன் இயக்கப் போகிறார்.

 

இந்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறனுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அதாவது, அமெரிக்காவை சேர்ந்த ‘பிலிம் கமெண்ட்’ (Film Comment) என்ற மாத இதழில் இயக்குநர் வெற்றிமாறன் பற்றியும், அவர் இயக்கிய படங்கள் பற்றியும் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய கவுரமாக கருதப்படுகிறது.

 

1962 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மாத இதழ் அமெரிக்காவின், நியூயார்க் மாநிலத்தில் இருந்து வெளியாகிறது. உலக அளவில் பிரபலமான இந்த பத்திரிகையில் இயக்குநர் வெற்றிமாறன் பற்றிய கட்டுரை வெளியாகியிருப்பது, இந்திய சினிமாவே பெருமைப்பட வேண்டிய விஷயமாகும்.

 

இந்த தகவலை, பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இயக்குநர் வெற்றிமாறனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.