தந்தையின் நினைவு தினம்! - நாடக கலைஞர்களுக்கு ரூ.25 லட்சம் வழங்கிய ஐசரி கணேஷ்

தமிழக முன்னாள் துணை அமைச்சரும், திரைப்பட நடிகருமான ஐசரி வேலன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (மே 14) அனுசரிக்கப்படுகிறது.
தந்தையின் நினைவு தினத்தையொட்டி, ஆண்டு தோறும், மே 14 ஆம் தேதியன்று வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் நிறுவனருமான, திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஐசரி கே.கணேஷ், ஆயிரக்கணக்கான நலிந்த நாடக நடிகர்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு அறுசுவை உணவும், புத்தாடைகளும் வழங்குவது வழக்கம்.
இவ்வாண்டு COVID 19 பெரும் தொற்றின் காரணமாக பல நாடக நடிகர்கள் வாழ்வாதாரத்திற்கு போராடுவதால் இவ்வாண்டு, ஒருவருக்கு ரூ.1000 என 2500 கலைஞர்களுக்கு மொத்தமாக ரூ.25 லட்சத்தினை ஐசரி கே.கணேஷ் வழங்கியுள்ளார். இந்த தொகை நாடக கலைஞர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.
சென்ற மாதம் நடிகர் சங்கத்தின் நலிந்த நாடக நடிகர்களுக்காக ரூ.10 லட்சத்தை ஐசரி கே.கணேஷ் நன்கொடையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.