Aug 04, 2019 10:34 AM

பிரபல தயாரிப்பாளரின் 90 வது படத்தில் இணைந்த ஜீவா, அருள்நிதி!

பிரபல தயாரிப்பாளரின் 90 வது படத்தில் இணைந்த ஜீவா, அருள்நிதி!

தமிழ் சினிமாவுக்கு பல புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்திய நிறுவனமான ஆர்.பி.செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 90 வது படமாக உருவாகும் ‘களத்தில் சந்திப்போம்’ படத்தில் ஜீவாவும், அருள்நிதியும் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.

 

1990 ஆம் ஆண்டு ‘புது வசந்தம்’ படம் மூலம் தயாரிப்பு துறையில் கால்பதித்த ஆர்.பி.செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பல வெற்றிப் படங்களை தயாரித்திருப்பதோடு, பல இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை திரையுலகில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

 

இநிநிறுவனம் தயாரிக்கும் 90 வது படமான ‘களத்தில் சந்திப்போம்’ படத்தை என்.ராஜசேகர் இயக்குகிறார். 

 

ஜீவா, அருள்நிதி இருவரும் முதல் முறையாக இணைந்து கதாநாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக மஞ்சுமா மோகன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் காரைக்குடி செட்டியாராக அப்பச்சி என்ற வித்தியாசமான வேடத்தில் ராதாரவி நடிக்க, ரோபோ சங்கர், பால சரவணன், இளவரசு, ஆடுகளம் நரேன், மாரிமுத்து, வேல ராமமூர்த்தி, ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, பூலோகம் ராஜேஷ், பெனிடோ ஆகியோரும் நடிக்கிறார்கள். பிசாசு பட புகழ் பிரக்யா மார்ட்டின் கெளரவ வேடத்தில் தோன்றுகிறார்.

 

Priya Bhavani Shankar and Manjuma Mohan

 

என்.ராஜசேகர் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் இப்படத்திற்கு, ஆர்.அசோக் வசனம் எழுத, பா.விஜய் மற்றும் விவேகா பாடல்கள் எழுதுகிறார்கள். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய, எம்.முருகன் கலையை நிர்மாணிக்கிறார். ராஜு சுந்தரம் நடனம் அமைக்க, பிரதீப் சண்டைப்பயிற்சியை மேற்கொள்கிறார்.

 

இரண்டு நண்பர்களுக்குள் உள்ள நட்பை மையமாக வைத்து உருவாகியுள்ள கமர்ஷியல் ஆக்‌ஷன் படமான இப்படத்தில் நட்பு, காதல், நகைச்சுவை, அதிரடி என அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கிறதாம். 

 

சென்னை, தென்காசி, காரைக்குடி போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக இருப்பதோடு, அதை தொடர்ந்து படமும் விரைவில் வெளியாக உள்ளது.