தொடர்ந்து இறக்கும் வேடத்தில் நடிக்கும் நடிகர்! - விஜய் படத்திலாவது உயிரோடு இருப்பாரா?

விஜயின் 64 வது படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தி நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பஸ்ட் லுக் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடப் போவதாக படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘தளபதி 64’ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் ‘மாநகரம்’ மற்றும் ‘கைதி’ என இரண்டு வெற்றிப் படங்கள் கொடுத்திருப்பதால், தளபதி 64 படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அந்தோனி வர்கீஸ்,சாந்தனு, ஆண்ட்ரியா, ஸ்ரீமன், ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்க, கைதி படத்தில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில், தற்போது ‘கைதி’ படத்தில் நடித்த மற்றொரு நடிகரும் இணைந்துள்ளார்.
‘கைதி’ படத்தில் தனியாக இருக்கும் போலீஸ்காரருக்கு உதவி செய்யும் கல்லூரி மாணவர்களில் ஒருவராக நடித்த லல்லு தான், தற்போது ‘தளபதி 64’ படத்தில் இணைந்துள்ளார்.
இந்த தகவல் வெளியானவுடன் லல்லுவுக்கு பலர் வாழ்த்து கூறி வருகிறார்கள். அதே சமயம், ‘ரங்கூன்’, ‘8 தோட்டாக்கள்’, ‘கைதி’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் லல்லு, இந்த மூன்று படங்களிலுமே கொலை செய்யப்பட்டு இறந்து விடும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதால், தளபதி 64 படத்திலாவது உயிருடன் இருக்கும் கதாப்பாத்திரத்தில் நடிப்பாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.