அரை சதம் அடித்த ‘களவாணி 2’! - துரை சுதாகருக்கு மேன் ஆப் தி மேட்ச்!

சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவான ‘களவாணி 2’ படம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு கடந்த ஜூலை மாதம் வெளியானது. முதல் பாகத்தில் இயல்பான காதல் மற்றும் கிராமத்து மனிதர்களை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருந்த இயக்குநர் சற்குணம், இந்த இரண்டாம் பாகத்தில், உள்ளாட்சி தேர்தலையும், அந்த தேர்தலை கிராமத்து மக்கள் எதிர்கொள்ளும் முறையையும் மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருந்தார்.
களவாணியில் நடித்திருந்த நடிகர், நடிகைகள் ‘களவாணி 2’ விலும் நடித்திருந்தாலும், கதை என்னவோ முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் புதிதாகவே இருந்தது. இதுவரை தமிழ் சினிமாவில் பல அரசியல் படங்கள் வெளியாகியிருந்தாலும், உள்ளாட்சி தேர்தலையும், அதில் நடக்கும் களவாணித்தனங்களையும் இப்படி வெளிச்சம் போட்டு எந்த படமும் காட்டியதில்லை.
அதிலும், ராஜேந்திரன் என்கிற ராவன்ணா என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக அறிமுகமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரின் வில்லத்தனமும், அவரது கதாபாத்திரமும் வித்தியாசமாக கையாளப்பட்டிருந்தது, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக டெல்டா மாவட்டப் பகுதியை கதைக்களமாக கொண்ட படம் என்பதால், அப்பகுதி மக்கள் படத்தை இன்னமும் கொண்டாடி வருகிறார்கள்.
ஆம், தமிழகத்தின் சில திரையரங்குகளில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் ‘களவாணி 2’ 50 நாட்களை கடந்து அரைசதம் அடித்திருக்கிறது. இதனால் படக்குழு உற்சாகமடைந்திருக்கிறார்கள். அதிலும், பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் உற்சாகத்தின் உச்சக்கட்டத்திற்கே சென்று விட்டாராம். காரணம், களவாணி 2-வில் அவரது நடிப்பை பார்த்துவிட்டு பல முன்னணி இயக்குநர்கள் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்களாம்.
ஆக, ‘களவாணி 2’ அரைசதம் அடித்தாலும், மேன் ஆப் தி மேட்ச் அவார்டை பப்ளிக் ஸ்டார் துரை சுதாகார் தான் கைப்பற்றியிருக்கிறார்.