Aug 05, 2019 04:45 AM

ரஜினிக்கு ஆதரவாக களம் இறங்கிய கமல்! - தயாரிப்பாளருக்கு கிடைத்த டோஸ்

ரஜினிக்கு ஆதரவாக களம் இறங்கிய கமல்! - தயாரிப்பாளருக்கு கிடைத்த டோஸ்

கமல் மற்றும் ரஜினி இடையே தொழில் போட்டி இருந்தாலும், வாழ்க்கையில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். சில நேரங்களில் கமல் படம் குறித்து ரஜினியும், ரஜினி படத்திற்காக கமலும் யோசனை சொல்வதோடு, கதை விவாதங்களிலும் ஈடுபடுகிறார்கள்.

 

இந்த நிலையில், ‘கோமாளி’ படத்தில் ரஜினியை கிண்டல் செய்திருப்பதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு போன் செய்து தனது எதிர்ப்பை பதிவு செய்த கமல், அவருக்கு சரியான டோஸ் விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கோமாளி. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கிண்டலடித்து வைக்கப்பட்ட காட்சி இடம்பெற்றிருக்கிறது.

 

அதில், கோமாவில் இருந்து எழுந்திருக்கும் ஜெயம் ரவி, அருகே இருக்கும் யோகி பாபுவிடம், இது எந்த வருஷம் என்று கேட்கிறார். அதற்கு அவர், 2017 என்று சொல்கிறார். அந்த சமயத்தில் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேஷம் குறித்து பேசும் காட்சி டிவியில் ஒளிபரப்பாகிறது. இதை பார்க்கும் ஜெயம் ரவி, ”இது 1996, நான் நம்ப மாட்டேன்” என்று கூறுகிறார். அதாவது, 1996 ஆம் ஆண்டில் இருந்தே ரஜினிகாந்த் அரசியல் பிரவேஷம் குறித்து பேசிக்கொண்டே இருக்கிறாரே தவிர, செயலில் எதையும் காட்டவில்லை, என்று கிண்டலடிக்கிறார்கள்.

 

இந்த காட்சியால் கோமாளி டிரைலர் சக்கைப்போடு போட, அதே சமயம் ரஜினி ரசிகர்கள் மட்டும் இன்றில் பல்வேறு தரப்பினரும் கோமாளி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த எதிர்ப்பால் அந்த காட்சியை கோமாளி படக்குழு நீக்குகிறதா அல்லது இலவச விளம்பரம், என்று அப்படியே வைத்து ஓட்டுகிறதா, என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

 

Comali

 

ஆனால், இந்த விவகாரத்தில் ரஜினிக்கு ஆதரவாக களம் இறங்கிய கமல்ஹாசன், கோமாளி பட தயாரிப்பாளருக்கு போன் செய்து டோஸ் விட்டதோடு, இந்த காட்சியை நகைச்சுவையாக தன்னால் பார்க்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.

 

இந்த தகவலை மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ், தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.