May 25, 2019 07:05 AM

35 நாட்களில் ‘கன்னி மாடம்’ படத்தை முடித்த போஸ் வெங்கட்!

35 நாட்களில் ‘கன்னி மாடம்’ படத்தை முடித்த போஸ் வெங்கட்!

சின்னத்திரை மூலம் பிரபலமான போஸ் வெங்கட், வெள்ளித்திரையிலும் பல வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார். வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் போஸ் வெங்கட், தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

 

தான் இயக்கும் முதல் படத்திற்கு ‘கன்னி மாடம்’ என்று தலைப்பு வைத்துள்ள போஸ் வெங்கட், சரியான திட்டமிடல் காரணமாக முழு படத்தையும் 35 நாட்களில் முடித்திருக்கிறார்.

 

இது குறித்து கூறிய போஸ் வெங்கட், “பிப்ரவரி 18ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி, மே 16 ஆம் தேதி முடித்தோம். இதில் மொத்த குழுவும் பங்கு பெற்ற 35 நாட்கள் மற்றும் கேமரா குழுவினர் மட்டும் பங்கு பெற்ற 7 நாட்களும் அடங்கும். தயாரிப்பாளர் ஹஷீர் அவர்களின் முழு ஆதரவு இல்லாவிட்டால், இது சாத்தியமல்ல. அவர் படைப்பு சுதந்திரத்தில் தலையிடவே இல்லை. ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை படத்துக்கு ஆதரவாக இருந்தார். எங்கள் குழுவுக்கு இப்படி ஒரு தயாரிப்பாளர் கிடைத்தது ஆசீர்வாதம். உண்மையில், கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்த பிறகு படக்குழுவினர் அனைவரையும் கட்டிப்பிடித்து தன் அன்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். இந்த காலத்தில், இது போன்ற உணர்ச்சிகரமான தருணங்களை ஒரு தயாரிப்பாளரிடம் பார்ப்பது எளிதல்ல.

 

’கன்னி மாடம்’ படம் மெட்ராஸ் என்றால் என்ன என்பதை வரையறுக்கும்?. நகரின் மிகவும் புகழ்பெற்ற அடையாள இடங்களை படம் பிடித்து, அவை பற்றிய முழு விவரங்களையும் அளிக்க நினைத்தோம். சென்னைக்கு சாதிக்க நினைக்கும் கனவுகளோடு வரும் இளைஞர்களும், மற்றவர்களும் மேட்டுகுப்பம், விஜயராகவபுரம் மற்றும் சூளைமேடு போன்ற பகுதிகளில் தங்குவது ஒரு பொதுவான விஷயம். எனவே, 'நேட்டிவிட்டி' காரணிகளுக்காக இந்த இடங்களில் முழு படத்தையும் படம் பிடித்திருக்கிறோம்.” என்றார்.

 

ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரிக்கும் இப்படத்தில் ஸ்ரீராம், காயத்ரி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்ஸ், விஷ்ணு ராமசாமி, சூப்பர் குட் சுப்ரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

 

ஹாரிஸ் ஜே.இனியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ரிஷால் ஜெய்னி எடிட்டிங் செய்ய, தினேஷ் சுப்பராயன் சண்டைப்பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார். 

 

Kanni Maadam

 

ஹரி சாய் இசையில் உருவான அனைத்து பாடல்களும் மாண்டேஜ் முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. ஆட்டோ டிரைவர்கள் பற்றிய ஒரு பாடலை ரோபோ சங்கர் பாடியிருக்கிறார். அந்தோணி தாசன் ஒரு பாடல் பாடியிருக்கிறார். மீதமுள்ள பாடல்கள் ஸ்ரேயா கோஷ, சின்மயி உள்ளிட்ட பிரபல பாடகர்கள் பாட இருக்கிறார்கள்.

 

’கன்னி மாடம்’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டிரைலர், ஆடியோ மற்றும் உலகளாவிய வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.