பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை திரைப்படமாகிறது!

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில், இந்திய பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கையும் திரைப்படமாக உருவாகிறது.
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கர்ணம் மல்லேஸ்வரி, உலக சாம்பியன்ஷிப் பளுதூக்கும் போட்டியில் இரண்டு முறை தங்கப் பதக்கம் வென்றதோடு, ஒலிம்பிக் போட்டியிலும், ஆசிய போட்டியிலும் பதக்கங்கள் வென்றிருக்கிறார். விளையாட்டு வீரர்களுக்கான உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது மற்றும் பத்மஸ்ரீ விருது வழங்கி இவரை இந்திய அரசு கெளரவித்துள்ளது.
இந்த நிலையில், கர்ணம் மல்லேஸ்வரியின் சாதனைகளையும், அவர் கடந்து வந்த சோதனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதத்தில் அவரது வாழ்க்கை திரைப்படமாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ள இப்படத்தை எம்.வி.வி.சத்யநாராயணா, கொனா வெங்கட் ஆகிய இருவரும், எம்.வி.வி சினிமா மற்றும் கொனா பிலிம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கிறார்கள்.
சஞ்சனா ரெட்டி இயக்கும் இப்படத்தின் கதையை கொனா வெங்கட் எழுதுகிறார். இப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளார்கள்.