தீபாவளிக்கு வெளியாகும் ’கைதி’-க்கு யு/ஏ சான்றிதழ்!

’மாநகரம்’ மற்றும் விஜயின் 64 வது படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் ‘கைதி’ தீபாவளியன்று வெளியாகிறது.
ஹீரோயின் இல்லாத படம், ஒரே இரவில் நடக்கும் கதை, முழுக்க முழுக்க இரவிலே படமாக்கப்பட்ட படம் என்று பல சிறப்புகளுடன், வித்தியாசமான முயற்சியுடனும் உருவாகியுள்ள இப்படம் இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவராத ஒரு படமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுவரை தான் நடித்த படங்களில் ‘கைதி’ படத்தின் கதாபாத்திரம் மிக முக்கியமானதாக இருக்கும், என்று நடிகர் கார்த்தி கூறியிருக்கிறார். அதேபோல் படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில், ‘கைதி’ படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. அப்படியானால் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருந்தாலும், அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய படமாகவே கைதி இருக்கும் என்று உறுதியாகிவிட்டது. எனவே, தீபாவளி கொண்டாட்டத்திற்கான ஒரு படமாகவும் கைதி இருக்கும் என்று தெரிகிறது.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் மூலம் ’ஜோக்கர்’, ‘அருவி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ உள்ளிட்ட பல தரமான படங்களை தயாரித்து வரும் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரித்திருப்பதாலும், படம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.