Oct 25, 2019 04:18 AM

’கைதி’ இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் கார்த்தி!

’கைதி’ இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் கார்த்தி!

கார்த்தி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘கைதி’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களிலும் கைதி படம் குறித்து ரசிகர்கள் பேச தொடங்கியிருக்கும் நிலையில், படத்தில் இருக்கும் அப்பா - மகள் செண்டிமெண்ட் விஷயத்தை படக்குழு நேற்று முதல் வெளியிட்டு வருகிறது.

 

‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பமாக இருப்பதாக கார்த்தி தெரிவித்துள்ளார். ஒரு படம் வெளியாகி அதன் ரிசல்ட் தெரிவதற்கு முன்பாகவே அப்படத்தில் நடித்த ஹீரோ, அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க வேண்டும், என்று விருபுகிறார் என்றால் அந்த படம் நிச்சயம் அவரை வெகுவாக கவர்ந்த படமாகத்தான் இருக்கும். கைதி படத்தின் படம் தொடங்கிய போது, கார்த்தி அப்படம் குறித்து என்ன பேசினாரோ, படம் வெளியாகும் போதும் அதே புத்துணர்ச்சியுடன், அப்படம் குறித்தும், கதாபாத்திரம் குறித்தும் பேசி வருவதால், இந்த படம் கார்த்தியின் சினிமா பயணத்தில் முக்கியமான படமாக இருக்கும் என்று தெரிகிறது.

 

கார்த்தி சிறையில் இருக்கும் போது அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. 10 வருடன் சிறை வாழ்க்கைக்கு பிறகு வெளியே வர அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இதுவரை பார்க்காத தனது பெண் குழந்தையை பார்த்துவிடலாம், என்ற எண்ணத்தில் கார்த்தி வெளியே வருகிறார். ஆனால், அவருக்கு 4 மணி நேரத்திற்கு மட்டுமே வெளியே இருக்க முடியும். அந்த 4 மணி நேரத்திற்குள் தனது மகளை பார்க்க வேண்டும், என்ற எண்ணத்தில் இருக்கும் கார்த்திக்கு மேலும் சில பிரச்சினைகள் வர, அவற்றை சமாளித்து தனது மகளை பார்த்தாரா இல்லையா, என்பது தான் படத்தின் கதை. இப்படி ஒரு கதையை கேட்கும்போது இருந்த ஆர்வம், அதை படமாக்கும் போது அதிகமாகவே இருந்ததாக கூறிய கார்த்தி, தற்போது முழுபடமாக பார்க்கும் போது தனது மகிழ்ச்சியாக இருக்கிறது, என்றார்.

 

கேரள மாநிலத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு பேசிய கார்த்தி, ‘கைதி’ ஸ்பீட், டை ஹார்ட் போன்ற ஆங்கிலப் படங்களுக்கு நிகராக இருக்கும். ஆக்‌ஷன், சேசிங் போன்றவை நிறைந்திருந்தாலும், அப்பா - மகள் என்ற செண்டிமெண்ட் படம் முழுவதுமே வருவதால் பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் படம் ஈர்க்கும், என்றார்.

 

மேலும், நானும் ஒரு பெண் குழந்தைக்கு அப்பா என்பதால் இந்தக் கதாபாத்திரத்துடன் என்னை சுலபமாகப் பொருத்திக் கொள்ள முடிந்தது, என்றும் தெரிவித்தார்.