Aug 07, 2018 11:50 AM

ஆபத்தான கட்டத்தில் கருணாநிதி - சினிமா நிகழ்ச்சிகள் ரத்து

ஆபத்தான கட்டத்தில் கருணாநிதி - சினிமா நிகழ்ச்சிகள் ரத்து

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி, கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு முதல் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

 

ரத்த அழுத்தம், இதய துடிப்பு குறைவு என்று பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் அவரது உடல் உறுப்புகள் செயலாற்றும்படி செய்வது சவாலாக இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்ததை தொடர்ந்து, காவேரி மருத்துவமனை பகுதியில் திமுக தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள். மேலும், அப்பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் போலீஸ், சென்னை முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

 

இதற்கிடயே, மு.க.ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோர் முதல்வர் எடப்பாடியை அவரது இல்லத்தில் சந்தித்து 20 நிமிடங்கள் பேசிவிட்டு வந்திருப்பதோடு, மெரீனா கடற்கரையில் உயிரிழந்தவர்களை புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் திடீரென்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

 

மேலும், இன்று மாலை 6 மணியளவில் கருணாநிதியின் உடல் நிலை குறித்து முக்கியமான அறிக்கை வெளியிடப்படும் என்று மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.

 

இந்த நிலையில், கருணாநிதி உடல் நிலையை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடக்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. பா.விஜய் இயக்கி நடித்திருக்கும் ‘ஆருத்ரா’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அதை ரத்து செய்துவிட்டதாக, பா.விஜய் நேற்று மாலையே அறிவித்துவிட்டார்.

 

Bharathiraja and Pa Vijay

 

தற்போது பாரதிராஜா தனது ‘ஓம்’ பட இசை வெளியீட்டை ரத்து செய்வதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பாரதிராஜா இயக்கி நடித்திருக்கும் ‘ஓம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 9 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறுவதாக இருந்த நிலையில், கலைஞரின் உடல் நிலையால், விழாவை ரத்து செய்துவிட்டேன், என்று பாரதிராஜா இன்று அறிவித்துள்ளார்.