கதிர், சூரி முதல் முறையாக இணையும் ‘சர்பத்’

‘பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பிறகு கதிர் நடிக்கும் படங்கள் அனைத்தும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்த விஜயின் 63 வது படத்தில் நடித்து வருபவர், அடுத்ததாக ‘சர்பத்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தில் முதல் முறையாக சூரியுடன் கூட்டணி வைத்திருக்கும் கதிருக்கு ஜோடியாக ரகசியா அறிமுகமாகிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா சித்தார்த் விபின், மாரிமுத்து ஆகியோர் நடிக்கிறார்கள்.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios) நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை பிரபாகரன் இயக்குகிறார். இயக்குநரின் பெயரைக்கொண்ட பிரபாகரன் ஒளிப்பதிவு செய்ய, ஜி.கே.பிரசன்னா எடிட்டிங் செய்கிறார். சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அஜிஸ் இசையமைக்க, ‘தரமணி’, ‘பேரன்பு’ உள்ளிட்ட பல படங்களுக்கு கலையை நிர்மாணித்த குமார் இப்படத்தின் கலைப்பணியை கவனிக்கிறார்.
பக்கா பேமிலி எண்டெர்டெயின்மெண்ட் படமாக உருவாக உள்ள இப்படத்தில் நடக்கும் சூழலும், படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளும் ரசிகர்களை படத்தோடு ஒன்ற வைத்துவிடுமாம்.
திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் இப்படத்தின் பெரும்பகுதி படமாக்கப்படுவதோடு, சில முக்கியமான காட்சிகளை சென்னையிலும் படமாக்க இருக்கிறார்கள்.