கீர்த்தி சுரேஷ் பா.ஜ.க-வில் இணைந்துவிட்டாரா? - மேனகா விளக்கம்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது இந்தியில் ஒரு படம் நடித்து வருகிறார். இதற்காக சில நாட்களாக மும்பையில் முகாமிட்டுள்ள அவர் பா.ஜ.க-வில் இணைந்துவிட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் பா.ஜ.க-வில் இணைந்தது குறித்து அவர் அம்மாவும் நடிகையுமான மேனகா, அளித்த விளக்கத்தில், “என் கணவர் சுரேஷ் பா.ஜனதா கட்சியில் இருக்கிறார். ஆனால் நான் இப்போதுவரை எந்த கட்சியிலும் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. கீர்த்தியும் இந்த விஷயத்தில் என்னை மாதிரிதான்.
கணவர் சார்ந்திருக்கிற கட்சி என்ற முறையில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய டெல்லி சென்று இருந்தேன். பிரசாரம் முடிந்த உடன் சினிமா பிரபலங்கள் சிலர் பிரதமர் மோடியைச் சந்திக்க இருக்கிறார்கள். நீங்களும் கலந்துகொள்ள வேண்டும், என்று கேட்டார்கள்.
சுரேஷ் கோபி, கவிதா என்று எனக்கு அறிமுகமான சிலர் இருந்ததால் நானும் கலந்துகொண்டேன். பா.ஜனதா அலுவலகத்திலேயே அந்த சந்திப்பு நடந்தது. குரூப் போட்டோ எடுத்துக் கொண்டோம். அந்த செய்திதான் நடிகை மேனகாவும் பா.ஜனதா கட்சியில் சேர்ந்துவிட்டார், என்ற அர்த்தத்தில் வெளியாகி இருக்கிறது.
கொஞ்சம் ஓவராக போய் ‘கீர்த்தியும் பா.ஜனதாவுல சேர்ந்துட்டாங்களாமே’ என்றுகூட விசாரித்திருக்கிறார்கள். ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லிவிடுகிறேன். எனக்கோ என் மகளுக்கோ அரசியல்ல ஈடுபடணும் என்ற எண்ணம் எல்லாம் இப்போதுவரை இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.