Apr 23, 2020 08:49 AM

திரைத்துறை அழிவுக்கு வழிகாட்டும் சூர்யா! - குமுறும் கோலிவுட்

திரைத்துறை அழிவுக்கு வழிகாட்டும் சூர்யா! - குமுறும் கோலிவுட்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளராக வலம் வருபவர் சூர்யா. அவர் மட்டும் இன்றி, அவரது மனைவி, அவரது தம்பி மற்றும் அவரது தந்தை மற்றும் அவரது உறவினர்கள் என குடும்பமே திரைத்துறையை சார்ந்து இருப்பதோடு, திரைத்துறை மூலம் பொருளாதார ரீதியாக பெரும் வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

 

இப்படி திரைத்துறை மூலம் வளர்ச்சி பெற்றிருக்கும் சூர்யாவின் குடும்பம், அதே திரைத்துறையை நம்பியிருக்கும் பல்லாயிரம் பேரின் அழிவுக்கு வழிகாட்டும் செயலை செய்திருப்பதால், ஒட்டுமொத்த கோல்விட்டே குமுறிக் கொண்டிருக்கிறது.

 

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’. சூர்யாவின் மனைவியான ஜோதிகா கதையின் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட முக்கிய நடிகர், நடிகைகள் நடித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஜெ.ஜெ.பெட்ரிக் என்பவர் இயக்கியிருக்கும் இப்படம் மார்ச் மாதம் வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா பாதிப்பால் படத்தில் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், ’பொன்மகள் வந்தாள்’ படத்தை நேரடியாக தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல், அமேசான் டிஜிட்டல் தளத்திற்கு சூர்யா விற்றுவிட்டாராம். சுமார் ரூ.9 கோடிக்கு அமேசான் நிறுவனம் வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது சூர்யாவுக்கு மிகப்பெரிய லாபமாம். அதாவது, படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.4.50 கோடி என்பதால், ரூ.4.50 கோடி சூர்யாவுக்கு லாபம் கிடைத்திருக்கிறதாம்.

 

Ponmagal Vanthal

 

இந்த வியாபாரம் மூலம் சூய்ராவுக்கு லாபம் என்றாலும், திரைத்துறையை நம்பியிருக்கும் சினிமா தியேட்டர் மற்றும் அதை நம்பியிருக்கும் தொழிலாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோருக்கு இது மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. காரணம், சூர்யாவின் படம் டிஜிட்டல் தளத்தில் விற்பனை செய்யப்பட்டதை அறிந்த, மேலும் பலர் தங்களது படங்களையும் டிஜிட்டல் தளங்களுக்கு விற்று விட தயாராகி வருகிறார்களாம். அதில் ஒரு படம் யோகி பாபுவின் ‘காக்டெய்ல்’ என்றும் சொல்லப்படுகிறது.

 

சூர்யாவின் படத்திற்கு கிடைத்தது போல பெரிய லாபம் கிடைக்கவில்லை என்றாலும், போட்ட பணம் கிடைத்தாலே போதும் என்ற நிலையில் பல தயாரிப்பாளர்கள் தற்போது டிஜிட்டல் தளங்களுக்கு படங்களை கொடுக்க முன் வந்திருப்பதால், காலம் காலமாக சினிமா தொழிலின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய தியேட்டர் மற்றும் விநியோகஸ்தர்கள் தொழில் மட்டும் இன்றி, சினிமா தியேட்டர்களை நம்பியிருக்கும் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரம் குமுற தொடங்கியுள்ளது.