Aug 31, 2019 06:17 AM

பாட்டு தான் என் உயிர்! - கவிஞர் இதயஜோதி

பாட்டு தான் என் உயிர்! - கவிஞர் இதயஜோதி

சினிமாவில் பல துறைகளில் ஒருவர் வெற்றி பெற்றாலும், அவர்களின் மனதுக்கு பிடித்த துறைகளில் மட்டுமே கடைசி வரை பயணிப்பார்கள். அந்த வகையில், திரைப்பட தயாரிப்பு, இயக்கம் உள்ளிட்ட பல துறைகளில் பணியாற்றிய கவிஞர் இதயஜோதி, பாடல்கள் எழுதுவதை மட்டுமே தனது உயிராக நினைத்து இன்னமும் சினிமாவில் வெற்றிகரமான பாடலாசிரியராக பயணித்துக் கொண்டிருக்கிறார்.

 

1968 ஆம் ஆண்டு தனது முதல் பாட்டை எழுதிய இதயஜோதி, தொடர்ந்து பல வெற்றிப் பாடல்களை எழுதினார். இவரது பாடல்களை ஸ்.பி.பாலசுப்ரமணியம், சுவர்ணலதா, சுசீலா, சைலஜா என பல முன்னணி பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். இப்படி தொடர்ந்து வெற்றிகரமான பாடலாசிரியராக பயணித்த இவருக்கு திரைப்படம் தயாரிப்பதற்கும், இயக்குவதற்கும் வாய்ப்பு கிடைக்க, அதிலும் தனது வெற்றியை பதித்தவர் பல படங்களை இயக்கியும், தயாரித்தும் வந்ததால், பாடல் எழுதுவதற்கு இடைவெளி விட்டுவிட்டார்.

 

Lyric Writer Idhaya Jyothi

 

இந்த நிலையில், இவரது பாடல்களின் வீரியத்தால் இன்னமும் இவரை பாடல் எழுத சொல்லி பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் விரும்புவதால் மீண்டும் பாடல் எழுத தொடங்கியிருப்பவர் ‘கலாச்சாரம் 2018’, ’சகவாசம்’ ஆகிய இரண்டு படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். மேலும், சில படங்களில் பாடல்கள் எழுதி வருகிறார்.

 

திரைப்பட பாடல்கள் மட்டும் இன்றி பக்தி பாடல்களிலும் தனி முத்திரை பதித்திருக்கும் இதயஜோதி, இதுவரை 200 க்கும் மேற்பட்ட பக்தி பாடல்கள் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய பக்தி பாடல்கள் இன்னமும் ஆன்மீக உலகில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. பக்தி பாடல்கள் மட்டும் இன்றி பல பக்தி கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய பல கட்டுரைகளை முன்னாள் முதல்வர் கருணாநிதி வெளியிட்டிருக்கிறார்.

 

தற்போது, இசையரசர் தஷி இசையமைப்பில் ‘கண்ணனும் கந்தனும்’ என்ற கடவுள்கள் முருகன் மற்றும் கண்ணன் ஆகியோரை பற்றி இவர் எழுதியிருக்கும் பக்தி பாடல் ஆல்பம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறது. 11 பாடல்கள் கொண்ட இந்த இசை ஆல்பத்தில் அனைத்து பாடல்களும் பக்தி உருக வைக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.

 

Lyric Writer Idhaya Jyothi

 

மெட்டுக்கு பாட்டோ அல்லது பாட்டுக்கு மெட்டோ, இசையமைப்பாளர் எப்படி கேட்டாலும் தனது வார்த்தை ஜாலத்தாலும், கவிதை ஜாலத்தாலும் அவர்களை மட்டும் இன்றி ரசிகர்களை திருப்திப்படுத்தும் இதயஜோதி, தான் சினிமாவில் பல துறைகளில் பயணித்தாலும் பாட்டு எழுதுவது தான் என் உயிர், அதற்காக தான் நான் சினிமா துறைக்கே வந்தேன். அதனால், இனி எனது முழு கவனத்தையும் பாட்டு எழுதுவதில் மட்டுமே செலுத்த போகிறேன், என்று கூறுகிறார்.

 

கவிஞர் இதயஜோதியின் வரிகள் தமிழ் ரசிகர்ளின் இதயங்களில் இடம் பிடிக்க நாமும் வாழ்த்துவோம்.