Oct 21, 2021 04:05 AM

சிம்புக்கு எதிராக நடக்கும் சதி! - கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்த டி.ராஜேந்தர்

சிம்புக்கு எதிராக நடக்கும் சதி! - கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்த டி.ராஜேந்தர்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் ‘மாநாடு’ திரைப்படம் தீபாவளியன்று வெளியாகும், என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அதற்கான பணியில் தயாரிப்பு தரப்பு முழு வீச்சில் ஈடுபட்டிருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

 

அந்த அறிக்கையில், தீபாவளிக்கு வெளியிடுவதாக இருந்த ‘மாநாடு’ திரைப்படம் தவிர்க்க முடியாத சில காரணங்களால், வெளியிட முடியவில்லை. மாறாக நவம்பர் 25 ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும், அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

 

மேலும், தீபாவளியன்று இரண்டு படங்கள் வெளியாக இருப்பதால், சரியான திரையரங்கங்கள் கிடைக்காமல் போய்விடும், என்ற காரணத்தால், இந்த முடிவை படக்குழு எடுத்திருப்பதாகவும், அவர் தெரிவித்திருந்தார்.

 

ஆனால், ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ மற்றும் விஷாலின் ‘எனிமி’ ஆகிய படங்கள் தீபாவளியன்று வெளியாக உள்ள நிலையில், சிம்புவின் ‘மாநாடு’ படம் வெளியாகமல் போனதற்கு உண்மையான காரணம், சிம்புக்கு எதிராக நடக்கும் சதி, என்று டி.ராஜேந்தர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

மேலும், சிம்புக்கு எதிராக சதி செய்து, அவருடைய படன்களுக்கு தொடர்ந்து சிக்கல் ஏற்படுத்தி வருபவர்கள் மீது டி.ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் இணைந்து சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

இது குறித்து நிருபர்களிடம் பேசிய டி.ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர், “மாநாடு படத்தை வெளியிடத் தடை ஏற்பட தமிழ்த்திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் என்கிற அமைப்பை நடத்தி வரும் அருள்பதி தலைமையிலான ஒரு பத்துப்பேர் தான் காரணம். அவர்கள் தொடர்ந்து சிம்பு படங்களுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

’வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கும் போதும் இதேபோன்ற இடையூறுகள் நடந்தன. அதன்பின் இப்போது மாநாடு படத்துக்கும் ரெட் என்று சொல்லிப் படத்தைத் தள்ளி வைக்கக் காரணமாக இருக்கிறார்கள்.

 

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று இல்லாத ஒரு சிக்கலைச் சொல்லித் தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார்கள். அச்சிக்கல் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. ஆனால் நீதிமன்றம் உட்பட எந்த அமைப்பும் எங்களை எதுவும் செய்யமுடியாது, என்று சொல்லிக்கொண்டு தெம்பாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 

சம்பந்தப்பட்ட எல்லோர் மீதும் புகார் கொடுத்திருக்கிறோம். என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? என்பதைப் பார்த்துவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை முடிவு செய்வோம்.” என்று தெரிவித்துள்ளனர்.