Jul 15, 2019 06:22 PM

இயக்குநராகும் ‘மெட்ராஸ்’ நடிகர்!

இயக்குநராகும் ‘மெட்ராஸ்’ நடிகர்!

நடிகர்கள் இயக்குநராவதும், இயக்குநர்கள் நடிகராவதும் தமிழ் சினிமாவில் வழக்கமாக நடக்ககூடிய ஒன்று தான் என்றாலும், எந்த நடிகர் இயக்குநராகிறார், அவர் இயக்கும் படம் எப்படிப்பட்டவை என்பது மட்டும் வழக்கமான ஒன்றாக இல்லாமல், வித்தியாசமானதாகவும், எதிர்ப்பார்ப்பு மிக்கதாகவும் இருக்கும். அந்த வகையில், ‘மெட்ராஸ்’ புகழ் நடிகர் பாவெல் நவகீதன் இயக்குநராக அறிமுகமாகும் படமும், வித்தியாசமான கதைக்களத்துடன், எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

 

‘V1' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். கதாநாயகியாக விஷ்ணு பிரியா நடித்துள்ளார். மேலும் லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

ஒவ்வொரு மனிதருக்கும் ஏதாவது ஒன்றில் பயம் இருக்கும். சிலருக்கு உயரத்தை பார்த்தால் பயம் ஏற்படும், சிலருக்கு இரத்தத்தை பார்த்தால் பயம் வரும், சிலருக்கு வேகம் என்றால் பயம் வரும். இப்படத்தின் ஹீரோ கதாபாத்திரத்திற்கு இருட்டு என்றால் பயம்.

 

V1 Movie

 

நாயகன் ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தாலும், இருட்டை பார்த்தால் பயப்படும் சுபாவம் கொண்டவர். V1 என்ற எண் கொண்ட வீட்டில் கொலை நடக்க, அந்த கொலைப்பற்றி விசாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு கதாநாயகன் உட்படுத்தபடுகிறான். இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன் இந்த கொலைக்கான மர்மத்தையும் கொலைக்காரனையும் கண்டுப்பிடித்தாரா என்பதே ‘V1’ படத்தின் கதை.

 

இன்வஸ்டிகேட்டிவ் திரில்லரான இப்படம் முழுக்க விருவிருப்பும் காட்சிக்கு காட்சி புதுப்புது யுக்திகளையும் அமைத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் பாவெல் நவகீதன். ’மெட்ராஸ்’ படத்தில் நல்ல நடிகராக முத்திரை பதித்த இவர், தொடர்ந்து ‘பேரன்பு’, ‘மகளிர் மட்டும்’, ‘குற்றம் கடிதல்’ என தொடர்ந்து நடித்து வருபவர், விருதுகள் வாங்கிய பல குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.

 

Actor and Director Pavel Navgeethan

 

கிருஷ்ணா சேகர் டி.எஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ரோனி ரப்ஹெல் இசையமைக்க, சி.எஸ்.பிரேம் படத்தொகுப்பு செய்கிறார். குமார் கலையை நிர்மாணிக்கிறார்.

 

பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா முவ்மண்ட் சார்பில் அரவிந்த் தர்மராஜ், என்.ஏ.ராமு, சரவணன் பொன்ராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை, பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக எல்.சிந்தன் வெளியிடுகிறார்.