Sep 08, 2025 09:52 AM

விலங்குகள் நடமாடும் காட்டுப் பகுதியில் படமாகும் ‘மலையப்பன்’!

விலங்குகள் நடமாடும் காட்டுப் பகுதியில் படமாகும் ‘மலையப்பன்’!

சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ். சந்திரசேகர் தயாரிப்பில், பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.ஜே. சூரியாவின் உதவி இயக்குநர் குருச்சந்திரன் நடித்து இயக்கும் ’மலையப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மதுரையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

இதுவரை மதுரையில் கேமரா தடம் பதியாத பகுதிகளில் படமாக்கப்பட்டு வரும் ‘மலையப்பன்’ படம் குறித்து இணை இயக்குநர் மூதுரை பொய்யாமொழி கூறுகையில், “சென்னை போன்ற பெருநகரத்தில் தொடங்கும் திரைப்படத்தின் கதை, ஒட்டுமொத்தமாக மலையும் மலை சார்ந்த இடமான மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை சுற்றியுள்ள கிராமங்களிலும், வாசிமலையான் கோயில் மலை, சதுரகிரி மலை, பருவதமலை, வெள்ளியங்கிரி மலை போன்ற தமிழகத்தின் தலைசிறந்த ஆன்மீக சுற்றுலா தளங்களில் இந்த கதையின் நிகழ்வுகள் நடப்பது போன்று ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுக் கதை அமைக்கப்பட்டுள்ளது.

 

வழக்கமாக திரைப்படங்கள் கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி காட்சி அமைப்புகள் இருக்கும். இந்த படத்தின் கதை சென்னை போன்ற பெரு நகரங்களில் தொடங்கி கதாநாயகனின் வாழ்க்கை எப்படி கிராமங்களில்  ஒரு உன்னதமான காதலோடு கதை  நகர்கிறது என்பதை மிகவும் எதார்த்தமாகவும் தத்ருபமாகவும் காட்சி ஆக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பயங்கரமான விலங்குகள் நடமாடும் காட்டுப் பகுதியில் காட்சிகளை படமாக்கி வருகிறோம். இத்தகைய லொக்கேஷன்கள் இதுவரை சினிமாவில் காட்டப்படாதவைகளாக இருப்பதால், நிச்சயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும்.

 

Malaiyappan

 

’லோக்கல் சரக்கு’, ’கடைசி தோட்டா’ போன்ற படங்களுக்கு இசையமைத்த சுவாமிநாதன் இராஜேஷ் இசைக்கு, கவிஞர் காதல்மதி பாடல் எழுத, பிரபல பின்னணி பாடகர் பிரசன்னா பாட, இராம்தாஸ் - விஜயா முகன் நடனம் அமைக்க, பி.எல். தேவா அரங்கம் அமைக்க, இலட்சுமணன் படத்தொகுப்பு செய்ய, இணைத் தயாரிப்பு திருப்பூர் செ. செல்வம் செய்கிறார்.

 

படத்தின் மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் ’திருப்பாச்சி’ பட இயக்குர் பேரரசு, ’திருடா திருடி’ பட இயக்குநர் சுப்ரமணிய சிவா, ’சிட்டிசன்’ பட இயக்குநர் ஷரவணா சுப்பையா  மற்றும் இன்னும் சில முன்னணி திரைப்பட நட்சத்திரங்களுடன், முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரியும் ‘மலையப்பன்’ திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது.” என்றார்.