Sep 22, 2025 07:15 PM

விதார்த் நடிப்பில் விவசாயியின் வாழ்வைப் பேசும் ‘மருதம்’!

விதார்த் நடிப்பில் விவசாயியின் வாழ்வைப் பேசும் ‘மருதம்’!

அருவர் பிரைவேட் லிமிடெட் (Aruvar Pivate Limited)  சார்பில் சி.வெங்கடேசன்  தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் வி.கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மருதம்’. சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளது.  

 

தற்காலத்திய சமூகத்தில் இன்னொருவனை  ஏமாற்றித்தான் நாம் முன்னுக்கு வரவேண்டும்,  அது தவறில்லை என்ற  எண்ணம் எல்லோரிடத்திலும் மேலோங்கிவிட்டது. இப்படிப்பட்ட சமூகத்தில் ஏமாற்றத்திற்குள்ளாகி பாதிகப்படும் ஒரு விவசாயி, அந்த பாதிப்பிலிருந்து மீள்கிறானா? இல்லையா?  என்பது தான் இப்படத்தின் மையம். பரபரப்பான சம்பவங்களுடன்,  அழுத்தமான திரைக்கதையில் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.  

 

இயக்குநர்கள் சரவண சுப்பையா, மோகன் ராஜா, பொம்மரிலு பாஸ்கரிடம் பணிபுரிந்தவரும், அடையாறு திரைப்பட கல்லூரியில் பயின்றவரும்,  தற்பொது SRM கல்லூரியில் உதவி பேராசியராக பணியாற்றுபவருமான கஜேந்திரன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். 

 

நம் தமிழின் ஐந்திணைகளில் விவசாய நிலத்தினை குறிக்கும் மருத நிலத்தின் அடையாளமாக இப்படத்திற்கு மருதம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

 

இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் விதார்த் நடித்துள்ளார். ரக்‌ஷனா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அருள் தாஸ், மாறன், சரவணன் சுப்பையா, தினந்தோறும் நாகராஜ், மாத்யூ வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கதைக்களம் நடப்பதால் அப்பகுதியைச் சுற்றி இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 

 

இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். அருள் சோமசுந்தம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்துரு B படத்தொகுப்பு செய்துள்ளார். பாடல்களை நீதி எழுதியுள்ளார். மக்கள் தொடர்பு பணிகளை ஏ.ராஜா கவனிக்கிறார். 

 

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், படத்தினை வரும் அக்டோபர் மாதம் திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.