Sep 28, 2021 06:26 AM

எந்தப்படத்துடனும் என் படத்தால் போட்டி போட முடியும்... - புளூ சட்டை மாறன் அதிரடி

எந்தப்படத்துடனும் என் படத்தால் போட்டி போட முடியும்... - புளூ சட்டை மாறன் அதிரடி

திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் ‘ஆன்டி இண்டியன்’ என்ற தலைப்பில் படம் ஒன்றை இயக்கியிருப்பதும், அப்படத்திற்கு தணிக்கை குழுவால் பெரும் சிக்கல் ஏற்பட்டதோடு, படம் வெளியாவதிலும் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டதும், அனைவரும் அறிந்தது தான். தற்போது அத்தனை சிக்கல்களும் தீர்ந்து படம் விரைவில் வெளியாக உள்ளது.

 

தணிக்கை குழுவினரால் ஏற்பட்ட சிக்கலை தீர்க்க படக்குழுவினர் நீதிமன்றத்தை வழக்கு தொடர, வழக்கை விசாரித்த நீதிமன்றம் ‘ஆன்டி இண்டியன்’ படத்தை தணிக்கை செய்ய, புதிய குழு ஒன்றை அமைக்குமாறு உத்தரவிட்டது. அப்படி அமைக்கப்பட்ட குழுவினர் படத்தை பார்த்து, படத்திற்கு எந்த ஒரு பெரிய வெட்டையும் கொடுக்காமல், சில அறிவுரைகளை மட்டுமே சொல்லி யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

 

இதனை தொடர்ந்து விரைவில் திரையரங்குகளில் படத்தை வெளியிடும் பணியில் இறங்கியூள்ள ’ஆன்டி இண்டியன்’ படத்தின் தயாரிப்பாளர் மூன் பிக்சர்ஸ் ஆதம்பாவாவும், இயக்குநர் இளமாறன் என்கிற புளூ சட்டை மாறனும், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

 

இயக்குநர் புளூ சட்டை மாறன் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், தனது படங்களுக்கு தணிக்கை குழுவினரால் ஏற்பட்ட சிக்கல்களை விவரித்ததோடு, தணிக்கை குழுவினரின் கெடுபிடிகளால் தரமான படங்களை எடுப்பவர்கள் பயந்து பயந்து படம் எடுக்க வேண்டியுள்ளதாக, குற்றம் சாட்டினார். அதே சமயம், தணிக்கை குழுவை தான் வேண்டாம் என்று சொல்லவில்லை. காலம் மாறிக்கொண்டு வரும் சூழ்நிலையில், அதற்கு ஏற்ப தணிக்கை விதிகளிலும் சில திருத்தங்களை கொண்டு வந்து அனைத்தையும் சட்டவரம்புக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம், என்றும் தெரிவித்தார்.

 

படம் குறித்து கூறிய புளூ சட்டை மாறன், நாடே கெட்டாலும் பரவாயில்லை, தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும், என நினைக்கின்ற சில சுயநல மனிதர்களை குறிக்கும் வகையில் தான் இந்த தலைப்பை வைத்துள்ளோம். ஒருவேளை இந்த தலைப்பு மறுக்கப்பட்டால் ‘கேணப்பையன் ஊருல கிறுக்குப்பையன் நாட்டாமை’ என்ற தலைப்பு வைக்கலாம், என்று முடிவு செய்து வைத்திருந்தோம்.

 

சினிமாவில் புதிதாக ஒரு விஷயம் வரும்போது எதிர்ப்புகள் கிளம்பத்தான் செய்யும். இந்த ஆன்டி இண்டியன் படத்தை பார்க்கும்போது, படம் புதுசா இருக்குதே, என்னடா இவன் இப்படி போட்டு அடிச்சுருக்கான் என்கிற எண்ணம் ஏற்படும். ஆனால் படத்தின் முடிவில் நீங்கள் அப்படி நினைக்க மாட்டீர்கள்.

 

எந்தப்படத்துடனும் போட்டி போட்டு, இந்தப்படத்தை தீபாவளிக்கு கூட வெளியிட முடியும். ஆனால் குறைவான தியேட்டர்கள் மட்டுமே கிடைக்கும் என்பதால் இந்தப்படம் வெகுஜன மக்களுக்கு சென்று சேராமல் போய்விடும். அதேபோல ஓடிடியில் நல்ல விலைக்கு கேட்டு வந்தாலும் கூட, முதலில் தியேட்டர்களில் வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.” என்றார்.

 

தயாரிப்பாளர் ஆதம்பாவா பேசுகையில், “இந்தப்படத்தை எடுக்கும்போதே பின்னால் பெரிய பிரச்சனைகள் வரும் என தெரிந்தே தான் ஆரம்பித்தோம். இதுவரை சென்சார் அமைப்பினர் ஒவ்வொரு படத்திற்கும் ஏதோ ஒரு அடிப்படையில் சான்றிதழ் கொடுத்து வருகின்றனர். ஆனால் இந்த ஆன்டி இண்டியன் படத்தை பார்த்துவிட்டு இதற்கு எப்படி சான்றிதழ் கொடுப்பது என்றே அவர்களுக்கு புரியவில்லை. மாறன் இயக்கியுள்ள இந்தப்படம், வழக்கமாக அவர்கள் பார்க்கும் படங்களில் இருந்து மாறுபட்டு இருப்பதால் அவர்களுக்கே குழப்பம் ஏற்பட்டுவிட்டது.

 

ஆனால் சென்னை, பெங்களூர், மும்பை என மூன்று இடங்களிலும் படம் பார்த்த சென்சார் கமிட்டியினர் ஒவ்வொருவரும் படத்தை பற்றி வெவ்வேறு கண்ணோட்டம் கொண்டிருந்தாலும், பார்த்த அனைவருமே இந்த படத்தை பாராட்ட தவறவில்லை. அதுவே எங்கள் படத்திற்கு கிடைத்த முதல் வெற்றி. இந்தப்படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனைகளால் ஒரு தயாரிப்பாளராக எனக்கு எந்தவித நட்டமோ பாதிப்போ இல்லை. சொல்லப்போனால் லாபம் தான். இப்போதே பல பேர் இந்தப்படத்தை வாங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள். அந்தவகையில் இந்த ஆன்டி இண்டியன் படம் அண்ணன் மாறனின் ருத்ர தாண்டவமாக இருக்கும்.” என்றார்.