Jun 03, 2020 04:09 PM

மீண்டும் பேய் படம் இயக்கும் மிஷ்கின்!

மீண்டும் பேய் படம் இயக்கும் மிஷ்கின்!

உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை, அனைத்திலும் பேய் படங்களுக்கு என்று தனி ரசிகர்களும், வரவேற்பும் கிடைப்பதுண்டு. தற்போதைய புதிய தொழில்நுட்பமான ஒடிடி தளங்களில் கூட பேய் படங்கள் மற்றும் திகில் வெப் தொடர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

 

இந்த நிலையில், ‘பிசாசு’ என்ற தலைப்பில் பேய் படம் இயக்கிய மிஷ்கின், மீண்டும் ஒரு பேய் படத்தை இயக்க ரெடியாகிவிட்டார்.

 

’சித்திரம் பேசுதடி’ முதல் இன்னும் வெளியாகாத ‘துப்பறிவாளன் 2’ வரை, 10 திரைப்படங்களை இயக்கியிருக்கும் மிஷ்கின், தற்போதைய கொரோனா ஊரடங்கில் கிடைத்த நேரத்தில் 11 கதைகளை எழுதி முடித்துவிட்டதாக பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அந்த 11 கதைகளில் ஒரு கதை பேய் கதையாம். அந்த பேய் கதையை தான் தனது 11 வது திரைப்படமாக இயக்க இருக்கிறாராம்.

 

‘துப்பறிவாளன் 2’ படத்தின் பெரும்பாலான பகுதியை இயக்கி முடித்த மிஷ்கின், விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்படத்தில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு சிம்பு ஆதரவு கரம் நீட்டினார். இதையடுத்து சிம்புவை வைத்து படம் இயக்க மிஷ்கின் தயாரான நிலையில் தான் கொரோனா பிரச்சினை வந்துவிட்டது. இதனால், சிம்புவை வைத்து இயக்க இருக்கும் படம் தொடங்க காலதாமதம் ஆகும் என்பதால், அதற்கிடையில் அருண் விஜயை வைத்து ஒரு படத்தை இயக்கிவிட முடிவு செய்துள்ளார்.

 

Arun Vijay

 

அருண் விஜயை வைத்து மிஷ்கின் இயக்கும் படம் பேய் படமாம். படத்திற்கு ‘காவு’ என்று தலைப்பு வைத்திருக்கும் மிஷ்கின், சினிமா படப்பிடிப்புகளை தொடங்க அரசு அனுமதி அளித்ததும் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறாராம்.