நயன்தாரா, அஞ்சலியை தொடர்ந்து யோகி பாபுவுடன் இணையும் அடுத்த டாப் ஹீரோயின்!

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, ஜூன் மாதத்தில் இருந்து ஹீரோவாக புரோமோஷன் ஆகிவிட்டார். ஆம், அவர் கதையின் நாயகனாக நடித்த ‘தர்மபிரபு’ கடந்த ஜூன் மாதம் வெளியாக, அவர் ஹீரோவாக நடித்த இரண்டாவது படமான ‘கூர்கா’ இம்மாதம் வெளியாகியிருக்கிறது.
தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் யோகி பாபு, முன்னணி ஹீரோயின்கள் நடிக்கும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.
நயன்தாராவுடன் ‘கோலமாவு கோகிலா’, ‘ஐரா’ ஆகிய படங்களில் இணைந்து நடித்தவர், அடுத்ததாக அஞ்சலியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில், அஞ்சலி, நயன்தாராவை தொடர்ந்து மூன்றாவதாக தமன்னாவுடனும் யோகி பாபு இணைந்திருக்கிறார்.
’அதே கண்கள்’ படத்தை இயக்கிய ரோகின் வெங்கடேசன் இயக்கும் இப்படத்திற்கு ‘பெட்ரோமாக்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. காமெடி கலந்த திகில் படமாக உருவாகும் இப்படத்தில் தமன்னா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் யோகி பாபு, காளி வெங்கட், முனீஷ்காந்த், சத்யன், சின்னத்திரை புகழ் டிஎஸ்கே என பெரிய காமெடி பட்டாளமே களம் இறங்குகிறார்கள். இவர்களுடன் பிரேம், ஸ்ரீஜா, கே எஸ் ஜி வெங்கடேஷ், பேபி மோனிகா மற்றும் பலரும் இணைந்து நடித்துள்ளனர்.
பல வெள்ளி விழா திரைப்படங்களை உலகெங்கும் விநியோகம் செய்த ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் நிறுவனம், ‘பெட்ரோமாக்ஸ்’ படம் மூலம் முதல் முறையாக தயாரிப்பு துறையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை நிச்சயம் இருக்கும். அதை தீர்க்கும் நோக்கில் ஒவ்வொருவராக இணைந்து, இறுதியில் ஒரு பலமான கூட்டணியாக சேர்ந்து, தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அந்த பிரச்சனை தீர்ந்ததா, அந்த பிரச்சனைகளுக்கு காரணம் யார், அதை அவர்கள் எப்படி வெற்றி கொண்டார்கள் என்பதை நகைச்சுவையும் திகிலும் கலந்து ஜனரஞ்சகமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ரோகின்.
டேனி ரேமண்ட் ஒளிப்பதிவில், லியோ ஜான் பால் படத்தொகுப்பில், வினோத் ராஜ்குமார் கலை இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில் இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.
இந்த திகிலான நகைச்சுவைக்கு ஜி ஆர் சுரேந்தர்நாத் வசனம் எழுத, சண்டை பயிற்சிக்கு ஹரி தினேஷ் பொறுப்பேற்று இருக்கிறார்.