சோகத்தில் நயன்தாரா! - ‘மூக்குத்தி அம்மன் 2’ முதல் பார்வையே இப்படி ஏன்?

மூக்குத்தி அம்மன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில், டாக்டர் ஐஷரி K கணேஷ் தயாரிப்பில், வெற்றி இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் ’மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
முதல் பாகமான ’மூக்குத்தி அம்மன்’ பக்தி, காமெடி, சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் குடும்ப ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. தற்போது அதே கதைக்களத்தில் இன்னும் பிரம்மாண்டமான அனுபவம் தரும் வகையில், கமர்சியல் படங்களில் தனித்துவமான திறமை பெற்ற இயக்குநர் சுந்தர்.சி, இயக்கத்தில், நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்க, ’மூக்குத்தி அம்மன் 2’ பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இப்படத்தில் நயன்தாராவுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்ட படைப்பாக, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஐஷரி கே. கணேஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
இப்படம் பற்றி தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் கூறுகையில், “மூக்குத்தி அம்மன் ஒரு படம் மட்டும் அல்ல, மக்களை உணர்வு ரீதியாக கவர்ந்த படைப்பு. பக்தி, மர்மம், நகைச்சுவை என அனைத்தையும் கலந்து, ஒரு பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தைத் தர வேண்டுமென்பதே எங்கள் குறிக்கோள். எங்கள் பிரம்மாண்ட உருவாக்கத்தின் ஒரு சிறு துளி தான் இந்த முதல் பார்வை.” என்றார்.
இரு ஒரு பக்கம் இருக்க, முதல் பார்வை போஸ்டரில் அம்மனாக நடிக்கும் நயன்தாரா, கவலையுடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருப்பது, அவரது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. பொதுவாக இதுபோன்ற ஆன்மீக படங்களின் முதல் பார்வை போஸ்டர்களில் அம்மன் ஆக்ரோஷமாகவும் அல்லது வேறு விதமான ஈர்ப்பை ஏற்படுத்துவது போலவும் இருப்பது போன்ற புகைப்படங்கள் தான் இருக்கும். ஆனால், ‘மூக்குத்தி அம்மன் 2’ போஸ்டரில் அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நயன்தாரா சோகமாக இருப்பது ஏன் ? என்று தான் தெரியவில்லை.