விஜய் ஏரியாவில் புது பஞ்சாயத்து! - ஆஃப்பான எஸ்.ஏ.சி

சமூக வலைதளங்களை மக்கள் அதிகம் பயன்படுத்துவதால், பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவங்கள் தற்போது டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில், நடிகை விஜய் தொடர்பான ஒரு பழைய விவகாரத்திற்கு தற்போது சமூக வலைதளங்களில் பெரிய பஞ்சாயத்தே தொடங்கும் நிலை உருவாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிக்க வந்ததில் இருந்து ‘இளைய தளபதி’ என்ற பட்டத்துடன் வலம் வருகிறார். ஆனால், இந்த இளைய தளபதி என்ற பட்டத்திற்கு முதல் சொந்தக்காரர் ‘பருத்திவீரன்’ சரவணன் தானாம். இது தொடர்பாக டைடில் கார்டு ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக, சரவணனை தொடர்புகொண்டு பலர் இது குறித்து கேட்கிறார்களாம்.
இதற்கிடையே, இந்த பட்டப்பெயர் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் நடிகர் சரவணன், ”திமுக பிரபலம் ஒருவர் தான் எனக்கு ‘இளைய தளபதி’ என்ற பட்டம் கொடுத்தார். அதன் முதல், நான் நடிக்கும் படங்களின் டைடில் கார்டில் இளைய தளபதி என்ற பட்டப்பெயருடன் தான் என் பெயர் இடம்பெறும். ஆனால், திடீரென்று எனக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. அந்த நேரத்தில் விஜய் நடிக்க வரும் போது அவருக்கு இளைய தளபதி என்ற பட்டப்பெயர் போடப்பட்டது.
அதை பார்த்து அதிர்ச்சியடைந்த நான், நேரடியாக எஸ்.ஏ.சந்திரசேகரிடம், ஏன் இப்படி செய்கிறீர்கள், என்று கேட்டதற்கு, நீங்க படம் நடிச்சா அந்த பட்டப்பெயரை போட்டுக்குங்க, என்று கூறினார். ஆனால், அதன் பிறகும் எனக்கு சரியான படங்கள் அமையாததால், அந்த விஷயத்தை அப்படியே விட்டுட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த பட்டப்பெயர் விவகாரம் குறித்து விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கேட்ட போது, “அதை பற்றி எதுவும் கேட்காதீங்க, நான் பேச விரும்பவில்லை” என்று கூறி, ஆஃப் ஆகிவிட்டாராம்.