May 15, 2020 05:33 AM

தனுஷ் படத்திற்கு குறி வைக்கும் ஒடிடி நிறுவனம்!

தனுஷ் படத்திற்கு குறி வைக்கும் ஒடிடி நிறுவனம்!

கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால், சுமார் 50 நாட்களுக்கு மேலாக எந்த புதிய படமும் ரிலீஸாகவில்லை. ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும், சினிமா தியேட்டர்கள் மீண்டும் செயல்படுவதற்கு எப்படியும் மூன்று மாதங்கள் ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இதனால் தயாரிப்பாளர்கள் பலர் பல்வேறு வகையில் இழப்புகளை சந்திக்க உள்ள நிலையில், சிலர் தங்களது திரைப்படங்களை நேரடியாக ஒடிடி தளங்களில் ரிலீஸ் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இதற்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், தயாரிப்பாளர்கள் பலர் படத்தை வியாபாரம் செய்வது தங்களது உரிமை, என்று கூறி வருகிறார்கள்.

 

இதற்கிடையே, விஜயின் ‘மாஸ்டர்’ படம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாக போவதாக வெளியான தகவலை அப்படத்தின் தயாரிப்பு தரப்பு மறுப்பு தெரிவித்ததோடு, எப்போது கொரோனா பிரச்சினை முடிந்தாலும் அதுவரை காத்திருந்து திரையரங்கில் தான் படத்தை ரிலீஸ் செய்வோம், என்று தெரிவித்தது.

 

இருப்பினும், முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றும் முயற்சியில் ஒடிடி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்திற்கு முன்னணி ஒடிடி நிறுவனம் ஒன்று குறி வைத்திருக்கிறதாம். இது தொடர்பாக அந்நிறுவனம், படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்திடம் பேச்சுவார்த்தையும் நடத்தியிருக்கிறதாம்.

 

Jagame Thanthiram

 

மேலும், சசிகாந்த் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஏலே’ மற்றும் ‘மண்டேலா’ ஆகிய படங்களையும் அந்நிறுவனம் வாங்க விருப்பம் தெரிவித்திருப்பதோடு, தனுஷின் படத்தை நேரடியாக ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்யும் யோசனையையும் தெரிவித்துள்ளதாம். 

 

இது குறித்து கூறிய தயாரிப்பாளர் சசிகாந்த், ஒடிடி நிறுவனம் ‘ஜகமே தந்திரம்’ படத்தை கேட்டது உண்மை தான். ஆனால், அது பற்றி நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. ‘ஜகமே தந்திரம்’ உள்ளிட்ட நான் தயாரிக்கும் மூன்று படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நிறைவு பெறாத நிலையில், ரிலீஸ் பற்றி எந்த முடிவும் எடுக்க மாட்டோம். படத்தின் பின்னணி வேலைகள் நிறைவு பெற்ற பிறகு ரிலீஸ் குறித்து பேச உள்ளோம். அதற்குள் ஒடிடி நிறுவனங்கள் எங்களை அனுகினாலும், நாங்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை, என்று தெரிவித்துள்ளார்.

 

Producer Sashikanth

 

’அசுரன்’ மற்றும் ‘பட்டாஸ்’ படங்களுக்குப் பிறகு தனுஷின் மார்க்கெட் அதிகரித்திருப்பதாலும், ‘பேட்ட’ படத்திற்கு பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பெரிய இயக்குநராக உயர்ந்திருப்பதாலும் ‘ஜகமே தந்திரம்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதே சமயம், தனுஷ் நடித்த படங்களிலேயே இப்படம் தான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்பதால், இப்படத்தின் வியாபாரமும் பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.