Mar 05, 2020 06:10 AM

’பல்லு படாம பாத்துக்க’ அப்படிப்பட்ட படமா?

’பல்லு படாம பாத்துக்க’ அப்படிப்பட்ட படமா?

’அட்ட கத்தி’, ‘விசாரணை’, ‘குக்கூ’ என அழுத்தமான கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் தினேஷ், நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பல்லு படாம பாத்துக்க’. இப்படத்தின் தலைப்பு மட்டும் இன்றி, சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலரும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அடல்டு காமெடி படம் தான் என்றாலும், டிரைலரில் இடம்பெற்ற சில காட்சிகள், “இது அப்படிப்பட்ட படமா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

 

மேலும், சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், இப்படிப்பட்ட படம் தேவையா? என்று நிருபர்கள் கேட்க, படத்தின் இயக்குநர் விஜய் வரதராஜன், "நிச்சயம் தேவை தான் சார், இப்படிப்பட்ட படங்களும் வரலாம் தவறில்லை", என்று கூறியதோடு, "நீங்கள் டிரைலரையும், படத்தின் தலைப்பையும் வைத்து படத்தை எடை போட வேண்டாம், படத்தில் ரொம்ப முக்கியமான ஒரு பிரச்சினை பற்றியும் பேசியிருக்கிறோம், அது என்ன என்பது படம் பார்க்கும் போது தெரியும். இந்த தலைப்பு வைக்க என்ன காரணம், இது ஒரு ஜாம்பி படம், ஜாம்பி கடிப்பவர்களும் ஜாம்பியாகிவிடுவார்கள், அந்த அர்த்தத்தில் தான் பல்லு படாம பாத்துக்க, என்று தலைப்பு வைத்திருக்கிறோம். கதைக்கு பொருத்தமாகவும் இருக்கிறது, படம் மீது எதிர்ப்பார்ப்பு ஏற்பட வைக்கவும் செய்வதால் தான் இந்த தலைப்பை வைத்தோம்", என்று பதில் அளித்தார்.

 

Pallu Padama Paathuka

 

நடிகர் தினேஷ் பேசுகையில், “இயக்குநர் சொல்வது போல தான், தலைப்பை வைத்து, இது அப்படிப்பட்ட படம் என்று முடிவு செய்யாதீர்கள். நான் கூட இந்த படத்தின் தலைப்பு குறித்து யோசித்தேன். ஆனால், கதைக்கு அது பொருத்தமாக இருப்பதால், நடிக்க ஓகே சொல்லிவிட்டேன். அட்ட கத்தி படத்தில் ஜாலியான ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்தேன். ஆனால், அதன் பிறகு எனக்கு அமைந்த கதாப்பாத்திரங்கள் ரொம்ப அழுத்தமானதாக இருந்தது. ஆனால், இந்த படம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். படம் முழுவதும் காமெடி நிறைந்திருந்தாலும், முக்கியமான பிரச்சினை பற்றியும் படத்தில் இயக்குநர் பேசியிருக்கிறார். எனவே, படத்தின் தலைப்பை வைத்து, இது அதுபோன்ற படம் என்று நினைக்க வேண்டாம், படத்தை பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள். அதே போல், முகம் சுழிக்கும் வகையில் படம் இருக்காது.” என்றார்.

 

Pallu Padama Paathuka

 

தினேஷ் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர்களுடன் சாரா, ஜெகன், லிங்கா, அப்துல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

பாலமுரளி பாலு இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பல்லு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஜய் வரதராஜ் எழுதி இயக்கியிருக்கும் இப்படம் வரும் மார்ச் 13 ஆம் தேதி வெளியாகிறது.

 

Pallu Padama Paathuka