May 17, 2019 04:20 PM

ஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது பரபரப்பு புகார்! - போலீசார் விசாரணை

ஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது பரபரப்பு புகார்! - போலீசார் விசாரணை

நடிகரும், முன்னாள் எம்.பி-யுமான ஜே.கே.ரித்தீஷ், கடந்த மாதம், தீடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். ராமநாதபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார்.

 

அவருடைய திடீர் மரணம் தமிழ் திரையுலகம் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில், ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதி, மீது ரித்தீஷ் வீட்டில் வேலை செய்த கேசவன் என்பவர், சென்னை பாண்டி பஜாரில் உள்ள காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

 

கேசவன் அளித்த புகாரில், “கடந்த 10 ஆண்டுகளாக ஜே.கே.ரித்தீஷிடம் நான் பணியாற்றி வருகிறேன். அவர், அவருக்கு சொந்தமான வீட்டை தன்னையும், தனதுய் குடும்பத்தினரையும் தங்கிக்கொள்ளுமாறு கொடுத்து விட்டார். இதனால் அவரிடம் பணி செய்ததற்கான ரூ.4 லட்சம் பணத்தை நான் பெறவில்லை.

 

தற்போது அவருடைய மனைவி ஜோதி, தனக்கு தர வேண்டிய தொகை ரூ.4 லட்சத்தை கொடுக்காமல், வீட்டை காலி செய்ய வேண்டும், என அடியாட்களுடன் வந்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுக்கிறார்.

 

அதேபோல், பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், வேல்ஸ் பல்கலைக்கழக தலைவருமான ஐசரி கணேஷும், ஜோதியிடம் வீட்டை கொடுத்துவிட்டு ஓடிவிடு, என என்னை தொலைபேசியில் மிரட்டுகிறார்.” என்று தெரிவித்துள்ளார்.

 

கேசவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணைக்கு பிறகே அவர் மீது வழக்கு பதிவு செய்வார்களா அல்லது சமரசம் செய்து வைப்பார்களா, என்பது தெரியும்.