Jun 14, 2020 05:21 AM

பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் மரணம்! - அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் மரணம்! - அதிர்ச்சியில் திரையுலகம்

கொரோனா பிரச்சினையால் திரையுலகினர் பெரும் துயரத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையில், மறுபுறம் திரையுலக பிரபலங்களின் திடீர் மரணங்கள் தொடர்வது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. 

 

இந்த நிலையில், பிரபல ஒளிப்பதிவாளர் பி.கண்ணன், இன்று மரணம் அடைந்தது தமிழ் சினிமாவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

பழம்பெரும் இயக்குநர் பீம்சிங்கின் மகனான பி.கண்ணன், 1978 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருப்பவர், இயக்குநர் பாராதிராஜாவின் ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். இவரை ‘பாரதிராஜாவின் கண்கள்’ என்று திரையுலகில் அழைப்பார்கள்.

 

தமிழ் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பணியாற்றியுள்ள கண்ணன், சுமார் 70-க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

 

இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட கண்ணன், கடந்த் சில நாட்களுக்கு முன்பு கை வலிக்கிறது, என்று தனியார் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மூளையில் பாதிப்பு இருக்கிறது, என்றும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், என்றும் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், அறுவை சிகிச்சை செய்தாலும், பிழைப்பது 50 சதவீதம் தான், என்றும் கூறியிருக்கிறார்கள்.

 

இதனை தொடர்ந்து கண்ணனின் குடும்பத்தார் அறுவை சிகிச்சை சம்மதம் தெரிவிக்க, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது மூளை செயலிழந்து விட்டதாகவும், பிறகு வெண்டிலேட்டர் மூலம் அவர் சுவாசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

 

இன்று காலை முதலே கண்ணன் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாக, சுமார் மதியம் 2 மணிக்கு மேல், கண்ணன் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.