Sep 15, 2020 04:33 AM

கொரோனா பாதிப்பால் பிரபல தமிழ் நடிகர் மரணம்! - அதிர்ச்சியில் கோடம்பாக்கம்

கொரோனா பாதிப்பால் பிரபல தமிழ் நடிகர் மரணம்! - அதிர்ச்சியில் கோடம்பாக்கம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று குணமடைந்தார்கள்.

 

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சீரியஸான கண்டிஷனுக்கு சென்று தற்போது குணமடைந்து வருகிறார். இருப்பினும், அவர் இன்னும் மருத்துவமனையில் தான் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுபோல், தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், பிரபல குணச்சித்திர நடிகரும் கலைஞர் தொலைக்காட்சியின் பொது மேலாளரருமான பிளோரண்ட் பெரேரா (Florent Pereira) கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Actor Florent Pereira

 

விஜயின் ‘புதிய கீதை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிளோரண்ட் பெரேரா, ’கயல்’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களிடம் பிரபலமானார். அப்படத்தை தொடர்ந்து ‘தர்மபுரி’, ‘ராஜா மந்திரி’, ‘தொடரி’, ‘சத்ரியன்’, ‘தரமணி’, ‘கொடிவீரன்’, ‘வேலையில்லா பட்டதாரி 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

 

பல வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வந்த பெரேரா, கலைஞர் தொலைக்காட்சியின் பொது மேலாளராக தற்போது பணியாற்றி வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்குப் பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர், சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார்.