உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்.எஸ்.சதிஷ் தயாரிப்பில், ’தூக்குதுரை’ மற்றும் ‘ட்ரிப்’ படங்களை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், இயக்குநர் செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான டீசர் சுமார் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசரில் இயக்குநர் செல்வராகவனின் ஒற்றை கேள்வியும், அதற்கான பதிலில் மறைந்திருக்கும் ரகசியம், எளிய மனிதராக தோன்றி, பிறகு இரத்தக்கறையுடன் காட்சியளிக்கும் செல்வராகவனின் தோற்றம், செல்வராகவனை விரும்பும் பெண்ணிடம் இருக்கும் காதல், என்று சில நொடிகள் ஓடும் டீசர் எளிய மனிதனின் வாழ்வியலை இரத்தமும் சதையுமாக சொல்லும் ஒரு படம் என்பதை உணர்த்துவதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்க செய்திருக்கிறது. மேலும், டீசரை பார்க்கும் பார்வையாளர்கள், வெகுவாக பாராட்டி கமெண்ட் தெரிவித்து வருவதோடு, படத்தை பார்க்கும் ஆர்வத்தை டீசர் தூண்டுவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், படத்தின் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் மற்றும் படத்தில் செல்வராகவனின் மாமா கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரும், தயாரிப்பாளருமான ஆர்.எஸ்.சதிஷ் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து படம் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.
இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் படம் குறித்து கூறுகையில், “உண்மை சம்பவம் ஒன்றை மையமாக கொண்டு திரைக்கதை எழுதியிருக்கிறேன். ஒரு சாதாரண மனிதன் பிறகு ஒரு உதவி செய்தாலும், அல்லது வேறு ஒரு விசயம் மூலமாகவும், சக மனிதர்கள் பார்வைக்கு தெய்வமாக தெரிவார், அப்படி தான் இந்த படத்தின் ஹீரோவும் ஒரு விசயத்தால் சக மனிதர்களுக்கு தெய்வமாகிறார்.
டீசர் முடியும் போது தெய்வம் கொல்லும், என்று முடிவதால் இது பழி தீர்க்கும் பாணியிலான கதை என்று நினைக்க வேண்டம். சாதாரணம் மனிதன் கொலை செய்தால் அது குற்றமாகும். ஆனால், தெய்வம் செய்தால் அது தண்டனையாக பார்க்கப்படும். அப்படிப்பட்ட ஒரு தண்டனையை ஹீரோ கொடுக்கிறார், அது யாருக்கு, எதற்கு என்பது படம் பார்த்தால் புரியும்.
இந்த படம் பெண்கள் பாதுகாப்பை பற்றி பேசுவதோடு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாகவும் இருக்கும். பெண்கள் பாதுகாப்பு என்ற உடன் பாலியல் ரீதியான குற்றங்களைப் பற்றி பேசவில்லை. வேறு ஒரு விசயத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும், என்று வலியுறுத்தியிருக்கிறோம். இந்த விசயம் அனைவரது வாழ்விலும் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நடக்கும், அப்படி நடக்கும் அந்த விசயம் மனித வாழ்க்கையை எப்படி பாதிப்பதோடு, ஒரு ஊர் பிரச்சனையாக எப்படி உருவெடுக்கிறது, என்பதை பற்றி பேசியிருக்கிறோம்.” என்றார்.

இயக்குநர் செல்வராகவனை தேர்வு செய்தது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத், “ஒரு சாதாரண கிராமத்து மனிதராகவும், அமைதியானவராகவும் இருக்க வேண்டும். எத்தனை முறை அடித்தாலும், எழுந்திருக்க முடியாத ஒரு நபராக இருக்க வேண்டும். அந்த கதாபாத்திரத்திற்கு செல்வா சார் சரியாக இருப்பார், என்று தோன்றியது. அதனால் தான் அவரை தேர்வு செய்தோம். அவரிடம் கதை சொன்ன போது, அவர் சில நாட்கள் நேரம் எடுத்துக் கொண்டு திரைக்கதையை முழுவதுமாக படித்துவிட்டு சம்மதம் தெரிவித்தார். அவர் முதல் முறையாக முழு ஹீரோவாக நடித்த படம் இது தான். இந்த கதையில் ஒரு வாழ்வியல் இருக்கிறது, நிச்சயம் இதை சொல்ல வேண்டும், என்று அவர் சொன்னார். அவருக்கு இந்த கதை ரொம்பவே பிடித்திருக்கிறது, அதனால் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் குஷி ரவி, கன்னடத்தில் சில படங்களில் நடித்திருக்கிறார். எங்கள் கதாபாத்திரத்திற்கு பொறுத்தமாக இருந்ததால் அவரை தமிழில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். செல்வராகவன் சாரின் மாமா கதாபாத்திரத்தில் படம் முழுவதும் வரும் முக்கியமான கதாபாத்திரத்தில் ஆர்.எஸ்.சதிஷ் நடித்திருக்கிறார். இவர் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்றாலும், நடிகராக தான் தெரியும், நான் உதவி இயக்குநராக பணியாற்றிய படத்தில் இவர் நடித்தார், அப்போது ஏற்பட்ட பழக்கம், இந்த படத்திற்காக இவரை தேர்வு செய்தேன். நல்ல கதை என்பதால் தயாரிப்பாளராகவும் இணைந்துக் கொண்டார். ஆனால், நடிகராக பயணிக்க வேண்டும் என்பது தான் அவரது விருப்பம். பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கும் அவருக்கு இந்த படம் முக்கியமான அடையாளத்தை பெற்றுக் கொடுக்கும். அவரது மனைவி கதாபாத்திரத்தில் கெளசல்யா மேடம் நடித்திருக்கிறார்.
உண்மை சம்பவம், விழிப்புணர்வு படம் என்பதை தாண்டி இந்த படம் அழகிய காதலை பற்றி பேசுகிறது. திருமணத்திற்குப் பிறகான கணவன் - மனைவி இடையிலான காதலை அழுத்தமாக பேசியிருக்கிறது. இதனால், இந்த படம் குடும்பத்துடன் பார்க்கும் ஒரு படமாக இருக்கும்.
சேலம் மாவட்டத்தில் உள்ள மலைகள் சூழ்ந்த பகுதிகளில் இருக்கும் நகரமலை என்ற கிராமத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்தினோம். அந்த கிராமத்தில் இதுவரை எந்த படத்தின் படப்பிடிப்பும் நடந்ததில்லை. அதுமட்டும் இன்றி. அந்த மக்களையே படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம். அதனால், படம் ஒரு வாழ்வியலை எதார்த்தமாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கும் ஒரு படைப்பாக இருக்கும்.” என்றார்.

தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.எஸ்.சதிஷ் படம் குறித்து கூறுகையில், “ஒரு சாதாரண மனிதர், வாழ்வில் முன்னேற துடிக்கும் மனிதர். அவர் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனையை எதார்த்தமாக பேசியிருக்கும் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத், இந்த படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார். செல்வராகவன், நாயகி குஷி ரவி, கெளசல்யா மேடம், ஊட்டியை சேர்ந்த சிறுமி லிர்த்திகா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு விழிப்புணர்வு படமாக மட்டும் இன்றி, குடும்பத்துடன் பார்க்க கூடிய ஒரு நல்ல படைப்பாகவும் இந்த படம் இருக்கும்.” என்றார்.
தற்போது இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், வெளியீட்டு பணிகளில் ஈடுபட்டிருக்கும் படக்குழு வரும் ஏப்ரல் மாதம் படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
ஏ.கே.பிரியன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவி வர்மா.கே ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபக்.எஸ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

