Jul 23, 2018 01:41 PM

செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாட்டுக்கு ஆட்டம் போட்ட பிரபு தேவா!

செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாட்டுக்கு ஆட்டம் போட்ட பிரபு தேவா!

முன்னணி தொலைக்காட்சியின் இசை நிகழ்ச்சியில் வெற்றி பெற்று தமிழகம் முழுவதும் பிரபலமாகியிருக்கும் நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ் - ராஜல்ஷ்மி தம்பதியின் முதல் திரைப்பட பாடலுக்கு இந்திய சினிமாவின் நடன ஜாம்பவான் பிரபு தேவா ஆட்டம் போட்டிருக்கிறார்.

 

அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரிப்பில் உருவாகும் படம் ‘சார்லி சாப்ளின் 2’. இப்படத்தின் முதல் பாகமான ‘சார்லி சாப்ளின்’ தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, ஒரியா உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.

 

இதன் முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த பிரபு தேவா இதில் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அதா சர்மா நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த பிரபு இதிலும் முக்கிய வேடத்தில் நடிக்க, இவர்களுடன் சந்தனா, அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா, செந்தில், ரவிமரியா, கிரேன் மனோகர், செந்தி, சாம்ஸ், காவ்யா, அமீத், பார்கவ், கோலி சோடா சீதா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் டி.சிவா நடிக்க, கெளரவ வேடத்தில் வைபவ் நடிக்கிறார்.

 

அம்ரீஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு செளந்தரராஜன் ஒளிப்பதிவு செய்ய, மகாகவி பாரதியார், யுகபாரதி, பிரபு தேவா, ஷக்தி சிதம்பரம், கருணாகரன், செல்ல தங்கையா ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். சசி எடிட்டிங் செய்ய, விஜய் முருகன் கலையை நிர்மாணிக்கிறார். ஜானி, ஸ்ரீதர் ஆகியோர் நடனம் அமைக்கின்றனர். கனல் கண்ணன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, மகேந்திரன் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார். தயாரிப்பு மேற்பார்வையை பரன்சோதி கவனிக்கிறார்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் ஷக்தி சிதம்பரம் படம் குறித்து கூறுகையில், “முதல் பாகம் மாதிரியே கலகலப்பான படம். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சூப்பர் சிங்கர் போட்டியில் முதல் பரிசு வென்ற செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி ஜோடி முதன் முறையாக சினிமாவில் பாடிய சின்ன மச்சான் செவத்த மச்சான்...சின்ன புள்ள செவத்த புள்ள...”என்ற பாடல் அம்ரீஷ் இசையில் பதிவு செய்யப்பட்டது. இந்த பாடல் செந்தி கணேஷ் - ராஜலஷ்மி ஜோடியால் தமிழகம் முழுவதும் கிராமம் நகர்ப்புறம் என்று எல்லா இடங்களிலும் பாடப்பட்டு பாப்புலரான பாட்டை அவர்களை வைத்தே சினிமாவில் பாட வைத்தோம். அவர்கள் திரைக்காக முதன் முதலாக பாடியது குறிப்பிடத்தக்கது.

 

இந்த பாடல் காட்சியில் பிரபு தேவா, நிக்கி கல்ராணி ஜோடி ஆடிப் பாடிய பாடல் காட்சி பொள்ளாச்சியில் ஐந்து நாட்கள் மிகப்பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது. சூப்பர் ஹிட் பாடலாக இது பட்டி தொட்டியெங்கும் ஹிட்டாகும்.” என்று நம்பிக்கையுடன் தெரிவித்ஹ்டார்.

 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.