கண்டெண்ட் இல்லாமல் தவிக்கும் டிவி, டிஜிட்டல் நிறுவனங்கள்! - தீர்வு சொல்லும் தயாரிப்பாளர்

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இந்தியாவில் பல்வேறு தொழில் துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பொழுதுபோக்கு துறைகளான சினிமா, தொலைக்காட்சிகள் மற்றும் டிஜிட்டல் நிறுவனங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாகவே தமிழ் திரையுலக அமைப்புகள், படப்பிடிப்புகள் உள்ளிட்ட அனைத்து சினிமா பணிகளுக்கும் தடை விதித்தது. திரையரங்கங்களும் மூடப்பட்டன. இதனால், சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதோடு, புதிய திரைப்படங்கள் வெளியாகாமல் இருப்பதால் தயாரிப்பாளர்களும் பெரிதும் பாதிப்படைந்திருக்கிறார்கள். அதேபோல், தொலைக்காட்சிகளிலும் சீரியல்களின் புதிய எப்பிசோட் ஒளிபரப்ப முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதால், பழைய எப்பிசோட்களை ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால், இந்த துறைகளின் மீதிருந்த மக்களின் ஆர்வம் சற்று குறைய தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், இந்த நிலையை மாற்றுவதோடு, யாரும் பாதிப்படையாத நிலையை உருவாக்கும் விதத்தில், பிரபல தயாரிப்பாளரும், வர இருக்கும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி சார்பில் போட்டியிடும் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் யோசனை ஒன்றை, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு வேண்டுகோளாக வைத்திருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்த ஊரடங்கு காலத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களின் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலையில், பழைய சீரியல்களை மறுஒளிபரப்புவதும், அதுபோல் ஏற்கெனவே திரையிடப்பட்ட திரைப்படங்களையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்பவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் ஏற்கெனவே திரையிடப்பட்ட நிறைய திரைப்படங்களின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமங்கள் இன்னும் விற்கபடாமல் இருக்கிறது. அந்த படங்களை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கும் ஒரு கன்டென்ட் கிடைக்கும். தயாரிப்பாளர்களின் பொருளாதார நெருக்கடியும் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும். அதுபோல் நிறைய திரைப்படங்களின் டிஜிட்டல் உரிமைகள் விற்கப்படாமல் இருக்கிறது. அவற்றையும் டிஜிட்டல் பிளாட் பார்ம் நிறுவனங்கள் வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.
ரிலீசுக்கு தயாரான திரைப்படங்கள் இந்த சூழ்நிலையில் வெளியிட முடியாமல் இருக்கின்றன. எப்போது இயல்பு நிலை திரும்பும், இனிமேல் திரைப்படங்களை எப்போது ரிலீஸ் செய்ய முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில்தான் சிறிய பட்ஜெட் திரைப்பட தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். இந்த மாதிரியான திரைப்படங்களை நேரடியாக எக்ஸ்குளூசிவாக சேட்டிலைட்டிலேயோ அல்லது டிஜிட்டில் பிளாட் பார்ம் மூலமாகவோ ரிலீஸ் செய்வதற்கான சாத்யகூறுகள் நிறைய உள்ளது. அதற்கும் நீங்கள் வழிவகை செய்து தயாரிப்பாளர்களுக்கு உதவ முன்வரவேண்டும்.
பொதுவாக தமிழ் திரைப்படத் துறைக்கும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் இடையே நெருக்கம் அதிகம். தொலைக்காட்சிகளின் வளர்ச்சிக்கு திரைப்படங்கள், பாடல்கள், காமெடி காட்சிகள் என தமிழ் திரைத்துறை தயாரிப்பாளர்களின் கன்டென்ட் எப்போதும் பக்கபலமாக இருந்து வருகிறது. எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தயாரிப்பாளர்களின் இக்கட்டான சூழ்நிலையில் அவர்களின் திரைப்படங்களை சேட்டிலைட் உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமங்களை வாங்கி உதவ வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.