100 படங்கள் வரை ரஜினிக்கு கிடைக்காத ஒன்று! - எது தெரியுமா?

தமிழ் சினிமாவுக்கு புது வருடத்தின் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கப் போகிறது. 2020 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி ரஜினியின் தர்பார் ரிலீஸை ஒட்டு மொத்த தமிழகமே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் இப்படம் தமிழ் மட்டும் இன்றி, இந்தி, தெலுங்கு, கன்னடம், தெலுங்கு என்று பல மொழிகளில் வெளியாகிறது.
அதிலும், ரஜினியின் வேறு எந்த படத்திற்கும் இல்லாத அளவுக்கு, பிற மொழிகளில் ‘தர்பார்’ படத்தின் விளம்பர பணிகளில் படக்குழு முழு கவனம் செலுத்துவதோடு, ரஜினியும் புரோமோஷன் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். இதற்கு காரணம், தமிழ் மட்டும் இன்றி பாலிவுட்டின் மார்க்கெட்டையும் பிடிப்பதற்காக தான் என்று கூறப்படுகிறது.
சுமார் ரூ.200 கோடிக்கு அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘தர்பார்’ தமிழ் ரசிகர்களுக்கு மட்டும் இன்றி, ஆந்திர, இந்தி போன்ற மொழி பேசும் ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளதாம். அதேபோல், ரஜினி படம் என்றால் இந்தியாவை தாண்டி ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும் வரவேற்பு பெறுவதால், அதையும் மனதில் வைத்து தான் படத்தை இயக்கியிருப்பதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருக்கிறார்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், “ஒரு காலத்தில் ரஜினி சார் படங்களுக்கு தெலுங்கு சினிமாவில் மார்க்கெட்டே இல்லாமல் இருந்தது. விஜயகாந்த் சாரின் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெறும். கமல் சாரின் படங்களை நேரடி தெலுங்கு நடிகர் படம் போலவே பார்ப்பார்கள். ஆனால், ரஜினி சார் படங்கள் மட்டும் தெலுங்கில் பெரிய ரீச் ஆகாமல் இருந்தது. ரஜினி சார் 100 படங்கள் நடிக்கும் வரை இந்த நிலை தான் நீடித்தது. பிறகு ‘பாட்ஷா’ படம் தான் அவரை தெலுங்கி சினிமாவில் ரீச் செய்தது. அதன் பிறகு வந்த படையப்பா போன்ற படங்கள் எல்லாம், தெலுங்கு மார்க்கெட்டையே புரட்டி போட்டது.
அதுபோல தான் இப்போது பாலிவுட் மார்க்கெட்டை குறி வைத்து ரஜினி சார் படங்கள் எடுக்கப்படுகிறது. அதிலும், ‘தர்பார்’ படத்தின் பட்ஜெட்டுக்கு பாலிவுட் மார்க்கெட்டை படம் ரிலிஸ் ஆன முதல் இரண்டு நாட்களில் பிடித்தே ஆக வேண்டும், என்ற கட்டாயம் இருப்பதால், ‘தர்பார்’ படத்தை ஃபேன் இந்தியா படமாகவே இயக்கியிருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.