Apr 26, 2020 11:52 AM

’மாஸ்டர்’ படம் குறித்து பரவும் வதந்தி!

’மாஸ்டர்’ படம் குறித்து பரவும் வதந்தி!

விஜயின் மாஸ்டர் படம் கொரோனா பாதிப்பால் வெளியாக முடியாத சூழலில் சிக்கியுள்ள நிலையில், அப்படம் குறித்த தகவல் ஒன்று கோலிவுட்டில் வைரலாகி வருகிறது.

 

கொரோனா பாதிப்பால் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா துறை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் ஜூன் மாதம் ஊரடங்கை அரசு தளர்த்தினாலும், சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதிக்காது என்று கூறுப்படுகிறது.

 

இதனால், ரிலீஸுக்கு தயாராக இருக்கும் சில திரைப்படங்களை ஓ.டி.டி தளத்திற்கு விற்பனை செய்ய சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, நடிகர் சூர்யா தயாரித்த ஜோதிகாவின், ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நல்ல விலைக்கு அமேசான் ஒடிடி தளத்திற்கு விற்பனை செய்ய, அப்படத்தை தொடர்ந்து யோகி பாபுவின் ‘காக்டெய்ல்’ படமும் டிஜிட்டல் தளத்திற்கு விற்பனை செய்யப்பட்டு விட்டதாம்.

 

இந்த நிலையில், விஜயின் ‘மாஸ்டர்’ படத்தையும் ஒடிடி தளத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதோடு, தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல், நேரடியாக ஒடிடி தளத்திலேயே படத்தை வெளியிடும் முடிவுக்கு மாஸ்டர் படக்குழுவினர் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

 

ஆனால், இதனை மறுத்திருக்கும் ‘மாஸ்டர்’ படக்குழுவினர், எக்காரணம் கொண்டும் படத்தை டிஜிட்டல் தளத்தில் ரிலீஸ் செய்ய மாட்டோம். இது தொடர்பாக பரவும் தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்தி தான். கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு, நல்ல தேதியாக பார்த்து தியேட்டரில் தான் ரிலீஸ் செய்வோம், என்று தெரிவித்துள்ளது.