சமுத்திரக்கனி படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்!

சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் படம் ‘வெள்ளையானை’. இப்படத்தில் ‘மனங்கொத்தி பறவை’ படத்தில் ஹீரோயினாக நடித்த ஆத்மியா சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிக்கிறார்.
ஒயிட் லேம்ப் டாக்கீஸ் (WHITE LAMB TALKIES) நிறுவனம் சார்பில் எஸ்.வினோத் குமார் தயாரிக்கும் இப்படம், விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையை நையாண்டித்தனமாகவும், நகைச்சுவையாகவும் பேசுகிறதாம்.
இந்த நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முழு படத்தையும் பார்த்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இன்றைய விவசாயிகளின் வாழ்க்கையின் மிக முக்கியமான வரலாற்றுப் பதிவு, நம் தாய் மண்ணின் இசையோடு இந்த படத்திற்கு இசையமைக்க மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தெரிவித்துள்ளார்.
இதில், யோகி பாபு, இ.ராமதாஸ், இயக்குநர் மூர்த்தி, எஸ்.எஸ்.ஸ்டான்லி, பாவா செல்லதுரை, ’சாலை ஓரம்’ ராஜு ஆகியோர் நடித்துள்ளனர்.
ஏ.எல்.ரமேஷ் படத்தொகுப்பு செய்யும் இப்படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். ஜெகதீசன் கலைத் துறையை கவனிக்க, தினேஷ் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கும் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.