சசிகுமாருக்கு வில்லனான சரத்குமார்!

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கும் மூன்றாவது படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடித்து வருகிறார். ‘சலீம்’ படத்தை இயக்கிய என்.வி.நிர்மல்குமார் இயக்கும் இப்படத்தில் சரத்குமார் வில்லனாக நடிப்பதாக் தகவல் வெளியாகியுள்ளது.
சசிகுமார் இதுவரை நடித்த படங்களிலேயே முற்றியிலும் மாறுபட்ட ஒரு படமாக உருவாகி வரும் இப்படத்தி சரத்குமார் வில்லன் வேடத்தில் நடிப்பதாக வெளியான தகவலால் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர் பி.கே.ராம் மோகன் கூறுகையில், “நாங்கள் திட்டமிட்டபடியே, எல்லா வேலைகளும் மிகவும் சுறுசுறுப்பாகவும், நிலையான வேகத்திலும் தொடர்ந்து நடக்கின்றன. நிர்மல்குமாரின் சரியான திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல் இல்லை என்றால், இது நிச்சயம் சாத்தியமல்ல. முக்கிய நடிகர்கள் நடிக்கும் படத்தை எந்த கால தாமதமின்றி குறித்த நேரத்தில் நிறைவு செய்யும் ஒரு இயக்குனர் அமைவது எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் பேரின்பம். எங்கள் படம் உருவாகி வரும் விதம் மிகவும் திருப்தி அளிக்கிறது. சரத்குமார் சார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் இந்த படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல், இந்த படத்தில் அவரின் புதிய தோற்றம் குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஜூன் 6ஆம் தேதி மும்பையில் தொடங்கும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 25 நாட்கள் நடக்கிறது. இந்த மும்பை மாநகரத்தின் அழகிய இடங்களில் சில முக்கியமான காட்சிகளை படமாக்க இருப்பதால், இந்த கட்ட படப்பிடிப்பு உண்மையில் முக்கியமானதாக இருக்கிறது.” என்றார்.
சரத்குமார் வில்லன் வேடத்தில் நடிப்பது உண்மையா? என்று கேட்டதற்கு, “வழக்கமாக, படக்குழுவினருக்கு ஒரு தயாரிப்பாளர் போடும் மிக கடுமையான விதி, படத்தை பற்றிய எந்த விஷயத்தையும் வெளியில் சொல்லக்கூடாது என்பது தான், அதை நானே மீறக்கூடாது. ஆனால் படத்தில் அவரை பார்க்கும் பார்வையாளர்களுக்கு முற்றிலும் ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். குறிப்பாக, சரத்குமார் - சசிகுமார் என்ற ஒரு வழக்கத்துக்கு மாறான, அழுத்தமான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கூட்டணி, அனைவரின் கவனத்தையும் திருப்புகின்றன. ஒவ்வொரு நடிகரும், தொழில்நுட்ப கலைஞர்களும் மிக ஆர்வத்துடன் உள்ளனர், இது ஒரு தயாரிப்பாளராக எனது தன்னம்பிக்கையை மேலும் ஊக்குவிக்கிறது.” என்றார்.
தற்போது சரத்குமார் எந்த வேடத்தில் நடிக்கிறார், என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், பெரும்பாலும் அவர் வில்லன் வேடத்தில் தான் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.