Oct 06, 2025 03:07 PM

அதிர வைக்கும் கச்சா எண்ணெய் திருட்டு மாஃபியா! - சொல்லப்படாத கதையோடு வரும் ‘டீசல்’

அதிர வைக்கும் கச்சா எண்ணெய் திருட்டு மாஃபியா! - சொல்லப்படாத கதையோடு வரும் ‘டீசல்’

’பார்க்கிங்’, ‘ரப்பர் பந்து’ ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தொடர் வெற்றி நாயகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஹரிஷ் கல்யாணின் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘டீசல்’. பீர் பாடல் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமான இப்படம், தீபாவளி பண்டிகை வெளியீடாக வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்.பி சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் தேவராஜுலு மார்க்கண்டேயன் மற்றும் எஸ்.பி.சங்கர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு திபு நினம் தாமஸ் இசையமைத்துள்ளார். எம்.எஸ்.பிரபு மற்றும் ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

 

ஹரிஷ் கல்யாணின் ஹாட்ரிக் வெற்றிக்கான வாய்ப்பாக உள்ள படம், தீபாவளி போட்டியில் களம் இறங்கும் படம்  மற்றும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் பாடல் இடம்பெற்றுள்ள படம் என்று பல விசயங்களில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இப்படத்தின் மையக்கரு பற்றி இயக்குநர் கூறிய தகவல் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச் செய்திருக்கிறது.

 

ஆம், இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கச்சா எண்ணெய் திருட்டு மாஃபியா பற்றிய உண்மை சம்பவங்கள் தான் படத்தின் மையக்கருவாம். தற்போது இந்த திருட்டு செயல் தடுக்கப்பட்டுள்ளது என்றாலும், கடந்த 2014 ஆம் ஆண்டு வரை, சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வந்த இந்த சம்பவத்தை கருவாகக் கொண்டு, ஆக்‌ஷன் கமர்ஷியல் ஜானரில் பண்டிகைக்கான கொண்டாட்ட படமாக கொடுத்திருக்கிறாராம் இயக்குநர் சண்முகம் முத்துசாமி.

 

தொடர்ந்து படம் பற்றி கூறிய இயக்குநர் சண்முகம் முத்துசாமி, ”இந்த சம்பவம் பற்றி எனக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதனைக் கொண்டு நான் விசாரித்த போது, பல தகவல்கள் கிடைத்தது, அவை அனைத்துமே அதிர்ச்சியாக இருந்தது. இது சென்னையில் மட்டும் நடக்கவில்லை, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நடக்கும் ஒரு பிரச்சனை. இதனை மையமாக கொண்டு ஒரு படம் பண்ணலாம் என்று தோன்றியது. அதற்காக கேட்டதை மட்டுமே வைத்து இந்த திரைக்கதையை அமைக்கவில்லை, அதில் உள்ள உண்மை என்னவென்று பல மாதங்கள் ஆய்வு மேற்கொண்டு அறிந்துக்கொண்டு தான் இந்த திரைக்கதையை எழுதினேன்.

 

இது சாதாரண பிரச்சனை அல்ல அதே சமயம் இது சர்வதேச அளவிலான ஒரு பிரச்சனையாகவும் இருக்கிறது, அதனால் அதில் இருந்த ஒரு பாகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதை கமர்ஷியல் படமாக கொடுத்திருக்கிறேன். இந்த பிரச்சனை 2014 ஆம் ஆண்டோடு முடிந்து விட்டது. படத்தின் கதையும் அந்த காலக்கட்டத்தில் நடப்பது போல தான் இருக்கும். 2014 மற்றும் அதற்கு முந்தைய காலக்கட்டத்தில் கதை நடந்தாலும், தற்போதைய காலக்கட்டத்திலும் இந்த கதையோடு மக்கள் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். காரணம், டீசல் என்பது நம் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அதை வைத்து இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது என்பது அதிர்ச்சியாகவே இருக்கும்.” என்றார்.

 

நாயகன் ஹரிஷ் கல்யாண் படம் குறித்து கூறுகையில், “இந்த கதையை இயக்குநர் என்னிடம் சொன்ன போது அதிர்ச்சியாக இருந்தது, அதை விட அதிர்ச்சி என்னிடம் சொன்னது தான். ஒரு மாஸான ஆக்‌ஷன் படம், என்னிடம் ஏன் சொல்றீங்க என்றேன். இல்லை, நீங்கள் இதற்கு பொறுத்தமாக இருப்பீர்கள் என்றார். நானும் முழுமையான ஆக்‌ஷம் படம் பண்ணாததால், எனக்கு ஒரு பெரிய மாற்றமாக இருந்த படம் இருக்கும் என்று நம்பினேன், அதனால் நடிக்க சம்மதித்தேன்.

 

இதில் நான் மீனவராக நடித்திருக்கிறேன். இதற்காக லாஞ்ச் படகு ஓட்ட கற்றுக்கொண்டேன். அந்த படகு ஓட்டுவது என்பது சாதாரணமானது அல்ல, அதை திருப்பவே ஒன்றரை மணி நேரம் ஆகும். அந்த அளவுக்கு கஷ்ட்டமாக இருந்தது. காட்சிகளை ரியலாக சூட் பண்ணதால், படகு ஓட்ட வேண்டி இருந்தது. அதனால் கற்றுக்கொண்டேன். பைபர் படகும் இதில் ஓட்டியிருக்கிறேன், மீன் வலை வீசுவதற்கும் பயிற்சி எடுத்துக் கொண்டேன். இந்த படம் எனது சினிமா பயணத்தில் முக்கியமான படமாகவும், நான் நடிக்கும் முதல் முழுமையான ஆக்‌ஷன் படமாகவும் இருக்கும்.

 

தீபாவளியன்று ரஜினி சார், கமல் சார் படங்களை பார்த்து மகிழ்ந்திருக்கிறேன், இன்று என் படம் தீபாவளியன்று வெளியாவது மகிழ்ச்சி. இது திட்டமிட்டதில்லை, நல்ல தேதியில் படத்தை வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த போது, மற்ற படங்களின் வருகை ஆகியவற்றை வைத்து பார்த்து தீபாவளியன்று வெளியானால் சரியாக இருக்கும் என்று தோன்றியது, அதனால் தீபாவளியன்று வெளியிடுகிறோம்.” என்றார்.

 

Diesel

 

பீர் பாடல் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றாலும் படத்தின் வெளியீடு தாமதம் ஆனது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் சண்முகம் முத்துசாமி, “பீர் பாடல் கம்போசிங் பண்ண உடன் பாடல் மிகப்பெரிய வெற்றி, என்று சொன்னார்கள். அந்த நேரத்தில் படம் பற்றி எதாவது வெளியிட வேண்டும் என்று கேட்டார்கள், சரி இந்த பாடல் மிகப்பெரிய வெற்றி என்கிறார்களே, முதல் வெளியிடே வெற்றியாக இருக்கட்டும் என்று அந்த பாடலை வெளியிட்டோம். ஆனால், அதன் பிறகு ஏகப்பட்ட படப்பிடிப்பு இருந்தது. படப்பிடிப்பை முடித்த பிறகு தானே படத்தை வெளியிட முடியும். நாங்கள் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் அந்த பாடலை வெளியிட்டு விட்டோம், ஆனால் அதன் பிறகு படப்பிடிப்பு இருந்ததால் தாமதம் போல் தெரிகிறது. வேறு எந்த பிரச்சனையும் இல்லை.” என்றார்.

 

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் அதுல்யா ரவி வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருக்கிறார். வில்லன்களாக வினய், விவேக் பிரசன்னா, சச்சின் கடேகர், ஷாகிர் உசேன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரமேஷ் திலக், கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.