கசப்பான காதல் அனுபவம்! - ஸ்ருதி ஹாசனின் உருக்கமான பதிவு

பாலிவுட் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி கோலிவுட் மற்றும் டாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக உயர்ந்த ஸ்ருதி ஹாசன், திடீரென்று வந்த வெளிநாட்டு காதலரால் சினிமாவை ஓரம் கட்டிவிட்டு, இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். தொடர்ந்து சில வெளிநாட்டு இசை நிகழ்வுகளில் பங்கேற்றவர், தனது வெளிநாட்டு காதலரை திருமணம் செய்துக் கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகப் போகிறார் என்று கூறப்பட்டது.
இதற்கிடையே, காதலரை பிரிந்த ஸ்ருதி ஹாசன் மீண்டும் சினிமா பக்கம் திரும்பினார். இதையடுத்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘லாபம்’ படத்தில் ஒப்பந்தமானவர் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ஒப்பந்தமாகியிருக்கிறார். மேலும், விட்ட சினிமாவை இனி விடாமல் பிடித்துக் கொள்வதற்கான அனைத்து வேலைகளையும் தீவிரமாக செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனது காதல் தோல்வி குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் ஸ்ருதி ஹாசன், ”காதல் எப்போது வரும் என்று சொல்ல முடியாது. யார் எப்போது காதலில் விழுவார்கள் என்றும் சொல்ல முடியாது. என்னை நேசிக்கும் ஒரு நல்ல மனிதர் எனக்கு வாழ்க்கை துணையாக வர வேண்டும், என்று விரும்பினேன். அவருக்காக காத்திருக்கிறேன்.
நல்லவர்கள் எப்போதும் கெட்டவர்களாக முடியாது. ஆனால், கெட்டவர்கள் நல்லவர்களாக நடித்தால் ஒரு நாள் அவர்கள் கெட்டவர்கள் என்பது தெரிந்துவிடும். அதே சமயம், கெட்டவர்களுடனான தொடர்பு நமது வாழ்க்கையில் நல்ல அனுபவத்தை கொடுக்கும். அதையெல்லாம் கடந்து தான் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்.
தற்போது சுயநலம் இல்லாத ஒரு நல்லவருக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். அப்படிப்பட்டவர் நிச்சயன் எனக்கு கிடைப்பார், என்று எதிர்ப்பார்க்கிறேன்.” என்று சோகமாக பேசியிருக்கிறார்.