Jan 02, 2021 06:43 PM

இன்னும் சில வருடங்களில் நடிப்பில் சிம்பு முதல் இடத்திற்கு வருவார் - இயக்குநர் சுசீந்திரன் புகழ்ச்சி

இன்னும் சில வருடங்களில் நடிப்பில் சிம்பு முதல் இடத்திற்கு வருவார் - இயக்குநர் சுசீந்திரன் புகழ்ச்சி

சுசீந்திரன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘ஈஸ்வரன்’ வரும் ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் பிரம்மாண்டமான முறையில், ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சுசீந்திரன், “சிம்புவைப் பற்றி எங்களைவிட ரசிகர்களாகிய உங்களுக்குத்தான் அதிகமாக தெரியும். ஏனென்றால் எங்களைவிட அதிகமாக நீங்கள்தான் அவரை அதிகமாக பின்தொடருகிறீர்கள்.

 

ஆனால், சிம்புவுடன் நான் பழகும்போது தான் தெரிந்தது. அவருக்கு ஏன் இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று. இன்னும் சில வருடங்களில் நடிப்பில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் என்பதில் ஐயமில்லை. இந்த வருடத்திலேயே அவர் நடிப்பில் 3 படங்கள் வெளியாகும்.

 

சிம்புவை வைத்து இயக்க போகிறேன் என்றதும் பல தயாரிப்பாளர்கள் எனக்கு போன் செய்து வேண்டாம் என்றார்கள். ஆனால், சிம்பு மற்றவர்கள் சொல்வதற்கு காது கொடுக்காதீர்கள். என் பின்னால் நீங்கள் மட்டும் இருங்கள், படப்பிடிப்பிற்கு 9ஆம் தேதி அன்று நான் இருப்பேன் என்றார். அதேபோல், நானும் இயக்கினேன். ஒரு மாதத்திலேயே படப்பிடிப்பு முடிந்து பொங்கலுக்கு வெளியிடுகிறோம்.

 

இப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. சிலர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். அவர்களையெல்லாம் ‘ஈஸ்வரன்’ படத்தின் வெற்றி விழாவில் சந்திக்கிறேன்.

 

நிதி அகர்வாலை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி. இப்படம் விரைந்து முடித்து வெளியாவதற்கு தயாரிப்பாளர் பாலாஜி கபா தான் காரணம். அவருக்கு மிகப்பெரிய நன்றி. இப்படத்தில் சிம்பு நடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கே.வி.துரை.” என்று புகழ்ந்தார்.

 

Eeswaran Audio Launch

 

படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், “நான் பார்த்து வளர்ந்த பிள்ளை சிம்பு. நான் கேள்விப்பட்ட சிம்பு வேறு. நான் பார்த்து பழகிய சிம்பு வேறு. தங்கமான பையன். அவரைப் பற்றி சொன்னார்கள். ஆனால், 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 6.45க்கே வந்துவிடுவார். இப்படம் விரைந்து முடிப்பதற்கு இதுவே உதாரணம். மிகவும் ஒழுக்கமானவர் சிம்பு. இப்படத்தின் பாடல்கள் எப்படி நன்றாக வந்திருக்கிறதோ அதுபோன்ற படமும் நன்றாக வந்திருக்கிறது. இப்படத்தின் இசை மிகவும் அருமையாக உள்ளது. நிதி அகர்வால் அருமையாக தமிழ் பேசுகிறார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.

 

நந்திதா சிறப்பாக நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் நடித்த ஒவ்வொருவரும் நன்றாக நடித்தார்கள். படப்பிடிப்பில் இருப்பது போன்ற எண்ணமே தோன்றவில்லை. என் குடும்பத்தில் உள்ளவர்கள் என்று தான் தோன்றியது. ஒளிப்பதிவைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. நேர்த்தியான திறமைக்காரர் திரு.

 

இப்படம் குடும்ப பாங்கான படம். இப்படத்தை பொழுதுபோக்காக பார்க்காமல் குடும்பத்தோடு வந்து பாருங்கள்.

 

நாங்கள் அந்த காலத்தில் 27 நாட்களில் படத்தை முடித்திருக்கிறோம். ஆனால் இப்போது டிஜிட்டல் உலகத்தில் 28 நாட்களிலேயே எடுத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு இயக்குநர் சுசீந்திரனின் திறமை தான் காரணம்.

 

என் பிள்ளை மனோஜ் எனக்கு ஜுனியராக நடித்து நான் பார்த்த படம் ‘ஈஸ்வரன்’ நெகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.