உதவி என்ற பெயரில் விளம்பர வெறியை வெளிப்படுத்திய பிக் பாஸ் சினேகன்!

கொரோனா பாதிப்பால் நாடே பெரும் பாதிப்படைந்துள்ள நிலையில், தினக்கூலி தொழிலாளர்கள் பலர் உணவுக்கே வழியின்றி தவிக்கிறார்கள். அந்த வகையில், சினிமா தொழிலாளர்களும், துணை நடிகர்களும் வறுமையில் சிக்கிக்கொள்ள அவரகளுக்கு முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் என பிரபலங்கள் பலர் உதவி செய்து வருகிறார்கள்.
அதே சமயம், வறுமையில் வாடுபவர்களுக்கு உதவி செய்கிறேன், என்ற பெயரில் பலர் தங்களது விளம்பர வெறியையும் வெளிப்படுத்தியும் வருகிறார்கள். அந்த வகையில், நடிகரும் பாடலாசிரியருமான சினேகன், சமீபத்தில் துணை நடிகர் ஒருவருக்கு உதவி செய்கிறேன், என்ற பெயரில், அதை விளம்பரப்படுத்துவதற்காக அந்த துணை நடிகர் வீட்டுக்கு ஒரு பெரிய கேமரா யூனிட்டையே அழைத்து சென்றிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
ஆம், ‘ரேணிகுண்டா’, ‘பில்லா 2’ உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பவர் தீப்பெட்டி கணேஷன். மனைவி, இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வரும் இவர், கஷ்ட்டப்படுவதாக சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். தனது குழந்தைகளுக்கு பால் வாங்க கூட பணம் இல்லாமல் கஷ்ட்டப்படுவதாக கூறியவர், அஜித் சார் உதவி செய்ய வேண்டும், என்றும் வேண்டுகோள் வைத்தார்.
இந்த வீடியோவை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ், தீப்பெட்டி கணேஷுக்கு உதவி செய்வதாக அறிவித்ததோடு, அவரது பிள்ளைகளின் கல்வி செலவை ஏற்றுக் கொள்வதாகவும், தீப்பெட்டி கணேஷனின் நிலையை அஜித்திடம் கொண்டு சேர்ப்பதாகவும், தனது சமூக வலைதளப் பக்கம் மூலம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாடலாசிரியர் சினேகன், தீப்பெட்டி கணேசனின் வீடியோவை பார்த்து மனம் உறுகி அவருக்கு உதவி செய்திருக்கிறார். என்ன உதவி என்றால், தீப்பெட்டி கணேஷனின் குடும்பத்திற்கு இரண்டு வாரத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கியிருப்பதோடு, அவரது பிள்ளைகளின் ஒரு வருட படிப்பு செலவையும் ஏற்றுக் கொள்வதாக கூறியிருக்கிறார். அப்படியே அவரது நிலையை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனிடமும் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
சினேகனின் இந்த உடனடி உதவி பாராட்டக்கூடியது தான். ஆனால், அவர் அதை செய்த விதம், அவரிடம் இருக்கும் விளம்பர வெறியை வெளிப்படுத்தும் விதமாக அமைந்து அமைந்திருப்பது தான் வேதனையாக உள்ளது. தற்போதைய சூழலில், இதுபோன்ற உதவியை கூட்டத்தை சேர்க்காமல் செய்ய வேண்டும். செய்த பிறகு கூட, அதை செய்தியாக சினேகன் பத்திரிகைகளுக்கு மெயில் அனுப்பியிருக்கலாம், அல்லது அவரது செல்போனின் வீடியோ எடுத்துக்கூட அதை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டு விளம்பர படுத்தியிருக்கலாம்.
ஆனால், அதை எல்லாம் விட்டுவிட்டு, இரண்டு ஒளிப்பதிவாளர்கள், லைட்டுகள், என்று ஒரு பாட்டாளத்தையே அழைத்துக் கொண்டு தீப்பெட்டி கணேஷனின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அவருடன் சென்ற ஒளிப்பதிவாளர்கள், ஏதோ டிவி சீரியல் எடுப்பது போல, சினேகன் தீப்பெட்டி கணேஷன் வீட்டு தெரிவில் நடப்பது முதல், அவர் உதவி செய்துவிட்டு தீப்பெட்டி கணேஷனிடம் பேசுவது என்று அனைத்தையும் வளைத்து வளைத்து படமாக்கியிருப்பதோடு, அதற்காக லைட்டுகள் எல்லாம் செட் பண்ணி எடுத்திருப்பதை பார்க்கும் போது, சிரிப்பதா அல்லது அழுவதா, என்றே தெரியவில்லை.
சினேகன் உதவி செய்வதை தெரியப்படுத்துவது தவறில்லை, அதை பார்த்து மேலும் சிலர் உதவி செய்வார்கள் என்றாலும், அதை இப்படி விளம்பரப்படுத்த சினேகன் மேற்கொண்ட விளம்பர நடவடிக்கையை தவிர்த்திருக்கலாம், என்று வீடியோவை பார்க்கும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதுபோன்ற விளம்பர பிரியர்கள் கொரோனா கொடூரத்திலும் தங்களை விளம்பரப்படுத்துவதை பார்க்கும் போது, ‘கரகாட்டாக்காரன்’ படத்தில் செந்திலை பார்த்து கவுண்டமனி செல்லும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.